செங்கத்தில் பரபரப்பு தனியார் பள்ளி அறையில் ஆசிரியர் மர்மச்சாவு உறவினர்கள் சாலை மறியல்

செங்கம், செப்.5: செங்கம் தனியார் பள்ளி ஆரிரியர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் தீத்தாண்டபட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி வேடியப்பன் மகன் ராஜா(24) ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் பள்ளி வளாகத்தில் உள்ள அறையில் அங்கேயே தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு சென்றுவருவார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி உதவியாளர் ஆசிரியர் ராஜாவை சந்திக்க அறைக்கு சென்றார். அப்போது அவர் தூங்கிக்கொண்டிருந்ததை கண்ட உதவியாளர் அவரை எழுப்பினார். அப்போது ராஜா இறந்திருப்பது தெரியவந்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். பள்ளி நிர்வாகிகள் செங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த ஆசிரியர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர். தகவல் அறிந்த ராஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். தொடர்ந்து ராஜாவின் சாவில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். பள்ளி நிர்வாகியை கைது செய்ய வேண்டும். உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவமனை முன் புதுச்சேரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த பயிற்சி கலெக்டர் பிரதாப், டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, தாசில்தார் ரேணுகா ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அவ்வழியே சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்று பயிற்சி கலெக்டர் பிரதாப் விசாரணை நடத்தினார்.

Related Stories: