விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

திருவண்ணாமலை, செப்.5: விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அகில இந்திய விவசாயிகள் தினம் கொண்டாடப் பட்டது. பின்னர், விவசாயிகள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு அளிக்க வேண்டி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 60 வயது நிரம்பிய விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் ஓய்வூதியத்தை மத்திய- மாநில அரசுகள் வழங்க ேவண்டும். 2014ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை தாமதமில்லாமல் திரும்பபெற வேண்டும்.

வீடு இல்லாத கிராமப்புற மக்களுக்கு 8 சென்ட் நிலத்தை கொடுத்து பட்டா வழங்க ேவண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய- மாநில அரசுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் தரமான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அப்போது, மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜோதி, மாவட்ட செயலாளர் நாராயணசாமி, தலைவர் திருஞானம், பொருளாளர் துரைசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ம.சுப்பிரமணி, எம்.ஆறுமுகம், ஆர்.வீரபத்திரன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Related Stories: