திருவண்ணாமலையில் அரசு டாக்டர்கள் ஒத்துழையாமை போராட்டம்

* ஏமாற்றத்துடன் திரும்பிய மாற்றுத்திறனாளிகள் * கல்லூரியில் வகுப்புகளும் நடைபெறவில்லை

திருவண்ணாமலை, செப்.4: திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்களின் நூதன போராட்டத்தால், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் அடையாள அட்டை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த மாதம் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.அதைத்தொடர்ந்து, கடந்த 20ம் தேதி மருத்துவமனையில் தர்ணா போராட்டம் நடந்தது. ஆனாலும், அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே, அரசுக்கு ஒத்துழையாமை இயக்கம் எனும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.அதன்படி, அரசு நடத்தும் ஆய்வுக் கூட்டங்களை புறக்கணித்தல், மகப்பேறு திட்டம், சிறப்பு மருத்துவ முகாம்கள், குறைதீர்வு கூட்டங்கள் போன்றவற்றை புறக்கணிப்பது என நூதன போராட்டத்தில் மாநிலம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், திங்கள்கிழமைதோறும் நடைபெறும் சிறப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க, அரசு மருத்துவர்கள் ஊனத்தின் தன்மை குறித்து பரிசோதித்து சான்று வழங்குவது வழக்கம்.அதன்படி, நேற்று நடந்த சிறப்பு முகாமில் அடையாள அட்டை பெற நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். ஆனால், ஒத்துழையாமை இயக்க போராட்டத்தின் காரணமாக, முகாமில் பங்கேற்க அரசு மருத்துவர்கள் வரவில்லை. டாக்டர்களின் போராட்டம் குறித்து தெரியாமல் வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேலும், அரசு டாக்டர்களின் நூதன போராட்டத்தின்படி, அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளையும் நேற்று புறக்கணித்தனர். ஆனால், மருத்துவமனையில் வழக்கம்போல உள்ேநாயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு போன்றவற்றில் டாக்டர்கள் அனைவரும் வழக்கம்போல பணியில் ஈடுபட்டனர்.அரசு டாக்டர்களின் போராட்டம் தீவிரமடையும் நிலையில், உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் அரசு தீர்வு காணாவிட்டால், வரும் 12ம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தவும் டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: