வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீதான பாலியல் புகார் பல்கலைக்கழக விசாரணை குழுவினர் மாணவியிடம் 4 மணி நேரம் விசாரணை

* வேறு கல்லூரிக்கு செல்லுமாறு மிரட்டுவதாக குற்றச்சாட்டு * ஆவணங்கள், ஆதாரங்களை அளித்தார்

தண்டராம்பட்டு, செப்.4: அரசு வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக, கோவை வேளாண் பல்கலைக்கழக விசாரணை குழுவிடம் பாதிக்கப்பட்ட மாணவி ஆதாரங்களையும், ஆவணங்களையும் அளித்தார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா வாழவச்சனூரில் அரசு வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி (வேளாண்மை) 2ம் ஆண்டு படிக்கும் சென்னையைச் சேர்ந்த 21 வயது மாணவிக்கு, அதே கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான புகார் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.மேலும், பாலியல் தொல்லை புகாரில் சிக்கியுள்ள உதவி பேராசியர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக, அதே கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர், மாணவியிடம் பேசிய செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அதைத்தொடர்ந்து, புகாரில் சிக்கிய உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். உதவி பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதோடு, பாதிக்கப்பட்ட மாணவி வானாபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரிலும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. புகாரை பெற்றுக்கொண்டதற்கான ரசீது மட்டும் ேபாலீசாரால் வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாணவியிடம் இருந்து ஆடியோ சிடி உள்ளிட்ட ஆவணங்கள் பெற்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து 3 நாட்களாக போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில், கோவை வேளாண் பல்கலைக்கழகம், மாணவி அளித்த பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதையொட்டி, பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணை குழுவினர் நேற்று வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரிக்கு வந்தனர்.அப்போது, விசாரணை குழுவினரிடம் நேரில் ஆஜரான மாணவி, தன்னிடம் இருந்த ஆதாரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை அளித்தார். மேலும், உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் கொடுத்த பாலியல் தொல்லை, உதவி பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோர் தன்னை மிரட்டியதற்கான ஆதாரங்கள், இது ெதாடர்பாக தன்னை ரேக்கிங் செய்த இரண்டு மாணவர்கள் குறித்து அப்போது மாணவி விளக்கமாக தெரிவித்துள்ளார்.

மதியம் 1 மணிக்கு தொடங்கிய விசாரணை, மாலை 5 மணிவரை நடந்தது. விசாரணை குழு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மாணவி உரிய விளக்கங்களை தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, விசாரணை குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இதுகுறித்து, விசாரணைக்குழு தலைவர் டாக்டர் சாந்தி கூறுகையில், `பல்கலைக் கழகத்தின் உத்தரவுபடி விசாரணை நடந்தது, தன்னிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் மாணவி அளித்திருக்கிறார். விசாரணை அறிக்கையை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்போம். மேல் நடவடிக்கையை பல்கலைக்கழகம் மேற்கொள்ளும்'' என்றார்.மேலும், விசாரணையில் ஆஜரான பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாவது:பல்கலைக் கழகம் நியமித்துள்ள இன்டர்னல் கம்ப்லைன்ட் கமிட்டியிடம் என்னுடைய தரப்பு விளக்கங்களையும், ஆதாரங்களையும் கொடுத்தேன். என்மீது உதவி பேராசியர்கள் தரப்பில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறேன்.

இந்த கல்லூரியில் இருந்து வேறு கல்லூரிக்கு டிரான்ஸ்பர் செய்ய விண்ணப்பிக்குமாறு மிரட்டுகின்றனர். அதன்மூலம், இந்த பிரச்னையை முடித்துவிடலாம் என நினைக்கின்றனர். எனவே, முடியாது என உறுதியாக மறுத்துவிட்டேன். எனக்கு நடந்த கொடுமை வேறு எந்த மாணவிக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படக்கூடாது.இதுவரை உதவி பேராசிரியர் தங்கபாண்டியனை மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். உதவி பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விசாரணை திருப்திகரமாக இல்லை. தற்போது ஆடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை அளித்திருக்கிறேன். மேலும், சென்சிடிவான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அது மிகவும் ரகசியமானது. அடுத்தடுத்த விசாரணைகளின்போது அளிப்பேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: