திருவண்ணாமலையில் 50 மைக்ரானுக்கு குறைவான 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருவண்ணாமலை, செப்.4: திருவண்ணாமலையில் நேற்று நகராட்சி அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையினால் 50 மைக்ரானுக்கு குறைவான 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று திருவண்ணாமலையில் நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் இரா.ஆல்பர்ட், எஸ்.வினோத்கண்ணா, கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.அதன்படி, பஸ் நிலையம், போளூர் ரோடு, மத்தலாங்குளத்தெரு, திண்டிவனம் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நடத்தி சோதனையில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் 10 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் கூறியதாவது:தற்போது 50 மைக்ரான் குறைவான அளவில் உள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அறிவிப்பை தொடர்ந்து வருகிற 15ம் தேதி முதல் ஒருமுறை உபயோகித்த தூக்கி எறியும் அனைத்து பிளாஸ்டிக் கவர்களும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க உடல் நலத்துக்கு கேடுவிளைவிக்ககூடிய பிளாஸ்டிக் பைகளை வர்த்தக நிறுவனங்களே தாமாக முன்வந்து உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். அதேபோல தண்ணீர் பாக்கெட் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: