கொத்தமங்கலத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு

ஆலங்குடி, ஆக.21: ஆலங்குடி அடுத்த கொத்தமங்கலத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் ஆலங்குடி - கொத்தமங்கலம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஆலங்குடி அடுத்த கொத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கட்டபெரியான் குடியிருப்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதிலிருந்து அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள மின்மோட்டார் அடிக்கடி பழுதடைந்துள்ளது. இதனால், முறையாக குடிநீர் கிடைக்காததால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மயில்வாகணனிடம் முறையிட்டனர். ஆனால், இதுகுறித்து ஊராட்சி செயலாளர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிகுடங்களுடன் கடந்த மாதம் ஜூலை 11ம் தேதி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், வருவாய்துறையினர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, ராம்குமார் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, உடனே பழுதடைந்த மின் மோட்டாரை அகற்றிவிட்டு புதிய மின்மோட்டார் அமைக்க உடனே நடவடிக்கை எடுப்பதாகவும், உடனே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.  இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், அந்த ஆழ்துளை கிணற்றில் புதிய மின்மோட்டார் இறக்குவதற்கு பதிலாக பழைய மின்மோட்டாரை இறக்கியதாக கூறப்படுகிறது. இதனால், பழைய மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால், மீண்டும் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஆலங்குடி - கொத்தமங்கலம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், வருவாய்துறையினர் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள பழுதடைந்த மின்மோட்டாரை அகற்றிவிட்டு புதிய மின் மோட்டார் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது சரிசெய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: