மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. சளி, இருமல், தொண்டைவலி ஆகியவற்றை சரி செய்யக்கூடியது.

சுக்கு மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்:

 சுக்கு - ஒரு சிறிய துண்டு

மிளகு - 2 தேக்கரண்டி

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்

நறுக்கிய தக்காளி - கால் கப்

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி, புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்துவரும்போது பொடித்த சுக்குக் கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.பலன்கள்: வயிற்றுக் கோளாறு, அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சுக்கு மிளகுக் குழம்பை வாரம் ஒருமுறை செய்து சாப்பிடலாம். இந்த சுக்கு மிளகுக் குழம்பு ஜீரணசக்தியை நன்கு தூண்டக் கூடியது. நோய் எதிர்ப்பு ஆற்றல்  கொண்டது.

நண்டு சூப்

தேவையான பொருட்கள்:

நண்டு - 2

தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - சிறு துண்டு

மிளகு - அரை தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

எண்ணெய் - தேவைக்கேற்ப

பூண்டு - 4 பல்

பச்சைமிளகாய் - 2

பட்டை - தேவையான அளவு

பிரியாணி இலை - தேவையான அளவு

கொத்துமல்லி இலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் நண்டை சுத்தம் செய்துகொள்ளவும். நண்டின் சதைப்பகுதி வெளியில் வருமாறு தட்டிக் கொள்ளவும். உடன் இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் போதுமான அளவு ஊற்றவும். தண்ணீர் கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும். நண்டு நன்கு வெந்ததும் மிளகு, சீரகத்தூள் போடவும். நண்டு ஓடு அடியில் இருக்கும். அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும்.பலன்கள்: நண்டு சளி, இருமல், தொண்டைவலி ஆகியவற்றை சரி செய்யக்கூடியது. மேலும்,  குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

தூதுவளை ரசம்

தேவையான பொருட்கள்:

தூதுவளை இலை - 1 கப்

புளி - சிறிய எலுமிச்சைப்பழ அளவு

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி - அரை தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கடுகு - 1 தேக்கரண்டி

மல்லி இலை , கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: முதலில், ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து தண்ணீரை வடிகட்டி வைக்க வேண்டும். பின்னர், மிக்ஸியில் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை அரைத்து அதனுடன் புளிதண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதில் தூதுவளை கீரை மற்றும் பூண்டை அரைத்து கலந்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியாக, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிஅதில் கடுகை போட்டு தாளித்து, சூப்பில் கொட்டவும். இதை சூப்பாகவும் குடிக்கலாம் அல்லது ரசமாக சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

பலன்கள்: தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். தூதுவளை இருமல், இரைப்பு, சளி முதலியவை நீக்கும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை சிறந்த மருந்து.

தொகுப்பு : ரிஷி

Related Stories: