அரியலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் திரவ உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு கூடுதலாக பயனளித்து வருகிறது கலெக்டர் தகவல்

அரியலூர், ஜூலை 20: அரியலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் திரவ உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு கூடுதலாக பயனளித்து வருகிறது என்று கலெக்டர் விஜயலட்சுமி கூறினார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் வெண்ணங்குழி கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பப்பாளி பயரிடப்பட்டுள்ளது. அதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வேளாண்மைத்துறையின் சார்பில் திரவ உயிர் உர உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண்மைத்துறைக்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதவனுக்கு 1 ஹெக்டேர் நிலத்தில் பப்பாளி நாற்றுகள் நடுவதற்கு ரூ.23 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

பப்பாளி மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதம மந்திரி சிறப்பு திட்டத்தின் கீழ் 3 ஹெக்டேருக்கு ரூ.2.25 லட்சம் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுக்கப்பட்டதால், ஒரு பப்பாளி மரத்திற்கு 200 கிலோ வீதம் 1 ஹெக்டேருக்கு ரூ.3 லட்சம் வரை அதிக மகசூல் பெற்று பயனடைந்துள்ளார். அதேபோல், வேளாண்மைத்துறையின் சார்பில் ஜெயங்கொண்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.1.33 கோடி மதிப்பில் திரவ உயிர் உர உற்பத்தி மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் அசோஸ்பைரில்லம் ரைசோபியம் பயறு, ரைசோபியம் நிலக்கடலை, பாஸ்போபாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உயிர் உரங்கள் பாக்கெட்டுகளில் திட வடிவில் விநியோகிக்கப்பட்டு வந்தன. இதனை 6 மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்த இயலும். இக்குறையினை போக்கும் வகையில், ஓராண்டு வரை பயன்படுத்தும் வகையில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்திட புதிய தொழில்நுட்பத்துடன் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதனால், நுண்ணீர் பாசனங்களின் மூலம் பயிருக்கு எளிதில் சென்றடையும் விதமாகவு திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் திரவ உயிர் உரங்கள் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. இவற்றால் ரசாயன உரங்களின் பயன்பாடு 20 முதல் 25 சதவீதம் வரை குறைகிறது. எனவே விவசாயிகள் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்ந்த திட்டங்களில் பயன்பெற வேளாண் அலுவலர்களை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: