கண்ணைக் கட்டிக் கொள்ளாதே-லேசர் மேஜிக்

நன்றி குங்குமம் டாக்டர்

கண்ணாடி அணிந்திருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் கேள்வி, ‘டாக்டர் நான் இப்ப லேசர் பண்ணிக்கலாமா?’ என்பது. கண்ணாடிக்கு மாற்றாக காண்டாக்ட் லென்சை பயன்படுத்தலாம் அல்லது லேசர் சிகிச்சை செய்யலாம் என்ற புரிதல் பரவலாக மக்களிடையே இருக்கிறது.

ஒளிவிலகல் பிரச்சனையால் (refractive error) பார்வைக் குறைபாட்டுடன் இருக்கும் அனைவருக்கும் லேசர் செய்ய முடியுமா என்று கேட்டால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். பிளஸ், மைனஸ், சிலிண்டர் போன்றபவர்களுடன் கண்ணாடி அணிந்திருக்கும் நபர்கள் refractive surgery என்று அழைக்கப்படும் அறுவை சிகிச்சைகளுக்குத் தகுதியானவர்கள் தான். Refractive surgeryக்குக் கீழ் வரும் ஒரு முக்கியமான வகை சிகிச்சை, லேசர் கதிர்களால் செய்யப்படும் LASIK, ZYOPTIC, SMILE போன்றவை.

லேசர் செய்வதற்குக் குறைந்தது 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். கூடவே கடந்த மூன்று ஆண்டுகளில், (அதாவது பதினெட்டு முதல் இருபது வயது வரையில்) அவர்கள் ஒரேவிதமான லென்ஸ் அணிந்திருத்தல் மிக அவசியம். லேசிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் நபருக்கு முதலில் சில பரிசோதனைகள் செய்யப்படும். அதில் முக்கியமான ஒன்று, கருவிழியின் பரிமாணங்களை அளக்கக்கூடிய corneal topography என்ற சோதனை. கம்ப்யூட்டர் போன்ற ஒரு இயந்திரத்தின் முன் உங்களை அமர வைத்து உங்கள் கண்களைப் புகைப்படம் எடுப்பார்கள்.

கருவிழியின் ஒவ்வொரு பகுதியின் அமைப்பையும் எண்களின் வாயிலாகவும் ஒளிப்படத்தின் வாயிலாகவும் துல்லியமான அறிக்கையாக அந்த இயந்திரம் தருகிறது. உங்கள் கருவிழி போதிய அளவுக்கு வலுவானதாக இருந்தால் மட்டுமே லேசிக் சிகிச்சை செய்யப்படும். மிக எளிதாக பத்து நிமிடத்தில் முடிந்து விடக் கூடிய சிகிச்சை இது. நோயாளியை அதற்கான கட்டிலில் படுக்க வைத்து, மேலே இருக்கும் நுண்ணோக்கியின் ஒளியைப்  பார்க்கச் சொல்வார்கள். ஏற்கனவே கணக்கிட்டு வைத்திருக்கும் அளவீடுகளை அந்த எந்திரத்தில் உள்ளிட்டு, சிகிச்சை துரிதமாக செய்யப்படும். நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே தெளிவான பார்வையைப் பெற முடியும். அடுத்த ஒரு வாரத்திற்கு கண்களை பாதுகாப்புடன் கவனிக்க வேண்டும்.

எல்லா சிகிச்சைகளைப் போலவே இதிலும் பக்கவிளைவுகள் இருந்தாலும் மிகக் குறைவுதான். லேசர் அறுவை சிகிச்சை செய்து சில மாதங்கள் வரை பழு தூக்காமல் இருக்க வேண்டும். ஒரு வருடம் வரை வாகனங்களில் செல்லும்போது கண்ணாடி அணிந்திருந்தால் நல்லது. அதே காலகட்டத்தில் கண்ணின் ஈரப்பதம் உலராமல் பாதுகாப்பதும் அவசியம்.சென்ற வாரத்தில் ஒரு மருத்துவ மாணவனை சந்தித்தேன். சிறு வயது முதலே கண்ணாடி அணியும் அவன், 21 நிரம்பிய உடன் லேசர் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறான். அதற்கான முன்பரிசோதனைகளில் கருவிழியின் கனம் மிகக் குறைவாக இருப்பதால் உங்களுக்கு லேசர் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.

‘‘என் அண்ணன் இதே மாதிரியான கண்ணாடி போட்டிருந்தான், அவனுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி லேசர் பண்ணினாங்களே.. எனக்கு மட்டும் ஏன் முடியலை?” என்று கேட்டான். கருவிழி ஆறு அடுக்குகளால் ஆனது. அவற்றின் நடுப்பகுதியான மெல்லிய தசைநார்களின் (stromal thickness) கனத்தை நமக்குத் தேவையான அளவில் மாற்றி அமைப்பது தான் லேசர் சிகிச்சை என்று அவனுக்கு விளக்கினேன். ‘‘பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி முக அமைப்பை, கொழுப்பைக் குறைக்கிறார்களே, அது மாதிரியா?” என்று கேட்டான்.

ஆம், கிட்டத்தட்ட அப்படித்தான். அவனது கருவிழியில் உள்ள சில பகுதிகள் மெல்லியதாக இருப்பதால், லேசர் செய்து கொள்ள முடியாது. வேறு சில அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் ஒன்று Phakic IOL implantation. வயதான பின்பு புரை பாதித்த லென்ஸை அகற்றிவிட்டு செயற்கை லென்ஸ் வைப்பது போல, இயற்கையான லென்ஸை அப்படியே வைத்துவிட்டு அதன் அருகிலேயே நமக்குத் தேவையான அளவில் ஒரு லென்ஸைப் பொருத்துவது இப்போது நடைமுறையில் இருக்கும் ஒரு புதிய சிகிச்சை முறை.

அது அந்த மருத்துவ மாணவனுக்குச் செய்யப்பட்டது. அதிகபட்ச தூரப்பார்வை குறைபாட்டை உடையவர்கள் சிலருக்கு (சுமாராக -10.0 Dsph) இயற்கையான லென்ஸை அகற்றுவது மட்டுமே (Clear lens extraction) போதுமானதாக இருக்கும். இவர்களுக்கு பின்னாளில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என்பது ஒரு கூடுதல் நன்மை. லேசர் சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு இன்னொரு முறையாக, கருவிழி அடுக்குகளின் நடுவே ஒரு விதமான வளையத்தைப் பொருத்தும் (intracorneal rings) சிகிச்சையும், கான்டாக்ட் லென்ஸைப் பொருத்தும் சிகிச்சையும் (intracorneal contact lens) நடைமுறையில் இருக்கிறது.

முந்தைய காலங்களில் விளையாட்டுத் துறையில் இருப்போர், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்கள்தான் அதிகமாக லேசர் சிகிச்சை செய்துகொண்டார்கள். தற்போது எல்லா தரப்பினரும் லேசர் சிகிச்சை செய்ய முடிகிறது. கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் போன்ற சாதனத்தை எப்பொழுதும் கையில் எடுத்துக் கொண்டு அலையும் அசௌகரியத்தை அது தடுக்கிறது. கனமான கண்ணாடி அணிபவர்களுக்கு பக்கவாட்டுப் பார்வையில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்யும்.

வாகனம் ஓட்டுபவர்களுக்கும் சில நேரங்களில் கண்ணாடியால் அசௌகரியம் ஏற்படலாம். அவர்களுக்கு லேசர் சிகிச்சை வரப்பிரசாதமாக அமைகிறது. சில பள்ளி மாணவர்கள் தங்கள் பதின் வயதிலேயே, ‘எங்களுக்கு இப்போதே லேசர் சிகிச்சை செய்யுங்கள்’ என்று அடம் பிடிப்பதைப் பார்க்கிறேன். அப்படி வந்த ஒரு மாணவனுக்கு ஆசிரியை ஒருவருக்கு நடந்ததை கூறினேன்.

அந்த ஆசிரியை தன் பதினெட்டாவது வயதிலேயே லேசிக் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் 18 வயதிற்கு மேல் ஒருவரின் உடல் வளர்ச்சி நிறைவு பெற்றுவிடும். வெகுசிலர் அதற்குப் பின்னும் வளர்வார்கள். நமது உயரத்தில் மாறுதல் நடக்க நடக்க, கண்ணின் அளவு, மூக்கின் அளவு எல்லாவற்றிலும் மாறுதல் இருப்பது இயல்புதான். அப்படித்தான் அந்த ஆசிரியைக்கும் நடந்தது.

லேசர் சிகிச்சையில் கருவிழியின் அளவு மாற்றி அமைக்கப்பட்டு விட, அதன் பின் அவரது கண் பந்து லேசாக வளர்ந்திருக்கிறது. அதனால் தனது லேசர் செய்த சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் லேசான பார்வைக் குறைபாட்டை உணர்ந்தார். மீண்டும் கண்ணாடி அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று எப்போதுமே வருத்தப்படுவார் அவர். அதைக் கூறிய பின் அந்த பள்ளி மாணவன் நானும் சில ஆண்டுகள் காத்திருக்கிறேன் என்று கூறினான்.

இளையவர்கள் பலர் தங்களுக்கு லேசர் சிகிச்சை செய்து கொள்வதில் முனைப்பாக இருக்க, அவர்களது பெற்றோரோ மகனின் கண்ணுக்குள் கதிர்வீச்சை செலுத்துவது பற்றி வெகுவாக அச்சப்படுகின்றனர். என் உறவுக்கார பெண்மணி ஒருவர், ‘‘என் மகள் கண்ணுக்குள்ள கரண்ட் வைக்கணும்னு சொல்றாளே? எதுவும் ஆயிடுச்சுன்னா என்ன செய்றது?” என்று வெகுவாக பயந்தார். ஆம் கண்ணுக்குள் கதிர்வீச்சை நேரடியாகப்பாய்ச்சுவது அபாயகரமானது தான்.

சூரியக்கதிர்களை, சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம் என்று கண் மருத்துவர்கள் எப்போதுமே அறிவுறுத்துகிறார்கள். ஆனால் லேசர் என்பது நேரடி கதிர்வீச்சு அல்ல. ஒளிக்கதிர்களை சில வகையான கிரிஸ்டல்களுக்குள் பாய்ச்சினால் அதிலிருந்து வெளிவரும் கதிர்கள் வேறுவிதமானவையாக, ஒருவித ஒளிச்சிதறலை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.

1949 இல் மிகக் கடுமையான கண் புற்றுநோயான melanomaவால் பாதிக்கப்பட்ட தன் நோயாளிகளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று நேரடியாக சூரிய வெளிச்சத்தைப் பார்க்கச் செய்து அவற்றின் பரவலைத் தடுத்தார் மேயர் ஷ்விக்கராத் என்ற விஞ்ஞானி. மேலை நாடுகளில் தொடர்ச்சியான சூரிய வெளிச்சம் இருக்காது, கூடவே விழித்திரையை சூரியக் கதிர்கள் நேரடியாக தாக்கி, பார்வையைப் பெரிதும் பாதித்தன. அதனால் அடுத்தடுத்து வந்த ஆய்வுகளில் ஒளிக் கதிரை எப்படி கண்ணுக்குப் பாதிப்பில்லாத வகையில் மாறுதல் செய்யலாம் என்று ஆராய்ச்சிகள் நடந்தன. அதன் விளைவாக லேசர்கதிர்கள் பல்வேறு சிகிச்சைகளுக்கு உதவியாக வந்தன.

சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்குள் லேசர் ஒளிக்கற்றைகள் மனித உடலின் தசைகளில் உறைதல், சீர்குலைவு, ஆவியாக்குதல், முற்றிலும் அழித்தல் போன்ற செய்கைகளைச் செய்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 வகையான கிறிஸ்டல்கள் லேசர் கதிரின் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. கண் மருத்துவத்தில் மட்டும் ஆர்கான் (Green, Blue) லேசர், கிரீன் லேசர், Nd-YAG லேசர், டயோட் லேசர், எக்சைமர் லேசர் முதலிய லேசர்கள் பயன்படுத்தப் படுகின்றன.

மிக வேகமாக செயலாற்றக்கூடிய ஒரு லேசரான femtosecond LASER தற்போது கண்அறுவை சிகிச்சைகளில் சிறு கத்திக்குப் பதில் துளை ஏற்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வினாடியின் ஒரு ட்ரில்லியனுக்கும் குறைவான நேரத்தில் வெளிப்படும் ஆற்றலை உடையதால், பக்கத்துத் தசைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் லேசிக், கண்புரை உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை சாத்தியமாக்குகிறது. இந்த லேசர் பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘அந்த ஒரு லட்ச ரூபாய் ஆபரேஷனா டாக்டர்?” என்றார் ஒரு பெரியவர்.

ஆம் தற்சமயம் அறுவை சிகிச்சைகளுக்கு மிக அதிகமான தொகை செலவாகிறது. பயன்பாடு பெருகப் பெருக இந்த தொகைகள் வருங்காலத்தில் வெகுவாகக் குறையலாம். லேசரைப் பார்த்து பயப்பட வேண்டாம். அதன் மேஜிக்கைப் புரிந்துகொண்டால், தேவை ஏற்படுகையில் தாராளமாக பயன்படுத்தலாம்.

(லேசர் கதிர் பயன்படுத்தப்படும் பிற கண் நோய்கள்.. அடுத்த இதழில்…)

Related Stories: