பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி

கராச்சி: பாகிஸ்தானில் பெண் மருத்துவருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் இரு மருத்துவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷனின் முன்னாள் இயக்குநராக இருந்த பீர்பால் ஜெனானி என்ற பாகிஸ்தான் இந்து சமூகத்தை சேர்ந்த பிரபல கண் மருத்துவர், நேற்று பெண் மருத்துவர் குராத்துல் ஐன் என்பவருடன் காரில் சென்றார். அவர்களது கார் லியாரி விரைவுச்சாலை அருகே சென்ற போது, கும்பல் ஒன்று வழிமறித்தது.

அந்த கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பீர்பால் ஜெனானி, குராத்துல் ஐன் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. படுகாயமடைந்த பீர்பால் ஜெனானி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குராத்துல் ஐன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் குறித்த செய்தியை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் யுஸ்ரா அஸ்காரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘டாக்டர் பீர்பால் ஜெனானி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர் குராத்துல் ஐனின் தோளில் குண்டு பாய்ந்ததால், அவர் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானில் இந்த மாதத்தில் மட்டும் இந்து மருத்துவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக, பாகிஸ்தானின் ஐதராபாத்தை சேர்ந்த இந்து மருத்துவர் ஒருவர், அவரது வீட்டிற்குள் அவரது ஓட்டுனரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: