தனிப்பட்ட அதிகாரம் என்ற தலைப்பில் 50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளனர்: ஆளுநர் மாளிகை மீது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு..!!

சென்னை: ஆளுநர் மாளிகையின் செலவு 50 லட்சமாக இருந்த நிலையில் அதிமுக ஆட்சியில் அது 5 கோடியாக மாறியுள்ளது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். டிஸ்கசனரி பண்ட் தொடர்பாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது பேசிய அவர், ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்ததாக ஆய்வு செய்யப்பட்டது. 2018-19 வரை ஆளுநருக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது, 2019 - 20ல் அது திடீரென்று ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. தனிப்பட்ட அதிகாரம் என்ற தலைப்பில் 50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளனர். ரூ.5 கோடியில் ரூ.4 கோடியை அட்சய பாத்திர திட்டத்துக்கு கொடுத்துள்ளனர்.

எஞ்சியுள்ள ஒரு கோடி ரூபாயை ஆளுநர் மாளிகை கணக்குக்கு கண்ணுக்கு தெரியாத கணக்கில் மாற்றப்பட்டது. ஒதுக்கப்பட்ட நிதியை சிஏஜி விதிமுறைகளை மீறி கையாண்டுள்ளனர்; ரூ.5 கோடியை மறைமுக கணக்கிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் ரூ.5 கோடி தரப்பட்டது; அதில் ரூ. 1 கோடி அட்சய பாத்திர திட்டத்துக்கு தரப்பட்டுள்ளது. 2019-20ல் இரு தவணையாக அட்சய பாத்திரம் திட்டத்திற்கு வழங்கியுள்ளனர். ஆளுநர் மாளிகை தந்த நிதிக்கு பிறகு அட்சய பாத்திர திட்டமே நின்றுபோனது. ரூ.1.8 கோடியை அரசு கணக்கில் இருந்து எடுத்து வேறு கணக்குக்கு செலுத்தியுள்ளனர். அரசின் கஜானாவிலிருந்து நேரடியாக செல்லாமல் தனியாக ஒரு கணக்கில் பணத்தை எடுத்து வைப்பது தவறு.

தனியார் தொண்டு நிறுவனத்தால் அட்சய பாத்திரம் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தலைப்பில் பணத்தை கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கணக்கை ஆய்வுசெய்தபோது அது அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. ஏதோ கட்சி நடத்துவதற்காக செலவு பண்ணப்பட்டதா என்று அச்சம் வருகிறது. ரூ.500, ரூ.1000-க்கு மானிய கோரிக்கையில் ஒப்புதல் பெற்று வருகிறோம்.

ஆனால் ரூ.5 கோடிக்கு யாருக்கும் கணக்கு சொல்ல தேவையில்லை என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டதுதானா? என்று கேள்வி எழுப்பினார். அட்சய பாத்திர திட்டத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது குறித்து ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்காக அதிமுக ஆட்சியில் தொடங்கிய அட்சய பாத்திரம் திட்டம் குறித்து துரைமுருகன் பேசினார்.

Related Stories: