மணிப்பூரில் இருந்து கடத்தி வந்த 9 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பவுடர் பறிமுதல்: 2 பேர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை

சென்னை: வடக்கு கடற்கரை பகுதியில் போதை பவுடர் பதுக்கி விற்பனை செய்த 4 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். அதேபோல், கொருக்குப்பேட்டை, ஆர்கே நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இவர்களிடமிருந்து 335 கிராம் மெத்தம் பெட்டமைன் போதை பவுடர் பறிமுதல் செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்து, 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து  9 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யாபாரதி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

மணிப்பூர் மாநிலத்திலிருந்து 9 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பவுடர் கடத்தி வந்த செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரை சேர்ந்த ராஜ்குமார், சந்திரசேகர் ஆகிய 2 பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜ்குமார் என்பவன் பர்மாவிலிருந்து, போதைப்பொருளை கடத்தி, மணிப்பூர் வந்து அங்கிருந்து ரயில் மூலம் கடத்தி வந்து, சந்திரசேகர் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகள், கேளிக்கை விடுதி பார்ட்டி நடக்கும் இடங்களுக்கு ஒரு கும்பல் விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது.

இதுவரை, சென்னையில் இந்த அளவிற்கு போதை பவுடர் பிடித்தது இல்லை, முதல்முறையாக அதிக அளவு பறிமுதல் செய்தது இதுதான். கடந்த வாரம் 335 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின்பேரில், மணிப்பூரை சேர்ந்த முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம். ரயில் மூலம் கடத்தி வருவதை தடுக்கும் விதமாக ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு பிடித்து வருகிறார்கள். தற்போது பிடிபட்ட போதை பவுடரின் மதிப்பு ரூ.1 கோடியே 80 லட்சம். ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யபடுகிறது. பிடிபட்டவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து விசாரணை செய்து, அவர்கள் 7 ஆண்டுகளில் ஏதேனும் சொத்துக்கள் வாங்கி இருந்தால், அதனை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பேட்டியின்போது, பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான், துறைமுக உதவி ஆணையர் வீரக்குமார், தனிப்படை ஆய்வாளர்கள் ராயப்பன், ராஜாசிங், உதவி ஆய்வாளர்கள் நிர்மல், பிரேம்குமார் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர். மேலும் போலீசார், கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தற்போது பிடிபட்ட 9 கிலோ போதை பவுடர் சந்தையில் ரூ.10 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Related Stories: