காதலை ஏற்க மறுத்த மாணவியின் மொபட் பெட்ரோல் டேங்க்கில் மண் கொட்டிய வாலிபர் கைது: கூட்டாளியும் சிக்கினார்

பெரம்பூர்: அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் பாபு (52) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள், தனியார் கல்லூரியில் பி.,காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனது மொபட்டை இரவில் வீட்டின் வெளியே நிறுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு நிறுத்தி இருந்தார்.  இந்நிலையில், இரவு 10 மணி அளவில் ஹெல்மெட் அணிந்தபடி 2 வாலிபர்கள் அங்கு பைக்கில் வந்துள்ளனர். பின்னர், ஒரு வாலிபர் மட்டும் கீழே இறங்கி வந்து, பாபுவின் மகள் மொபட்டில் பெட்ரோல் டேங்கின் மூடியை திறந்துள்ளார். பின்னர், பையில் கொண்டு வந்த மண்ணை அந்த பெட்ரோல் டேங்க்கில் கொட்டியுள்ளார். இதை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து, வெளியே வந்தனர்.

உடனே, அந்த நபர் சுதாரித்துக்கொண்டு, உடன் வந்த நபருடன் பைக்கில் அங்கிருந்து தப்பியுள்ளார். உடனே இதுபற்றி பாபுவிடம் தெரிவித்துள்ளனர். அவர் வந்து பார்த்தபோது, பெட்ரோல் டேங்க்கில் மண் கொட்டப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து பாபு அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, அதில் மர்ம நபர்கள் வந்த பைக் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.  அதில், ஓட்டேரி சேமாத்தம்மன் கோயில் 1வது தெருவை சேர்ந்த பரத் (19), ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது அப்சல் (19) ஆகியோர், மொபட் பெட்ரோல் டேங்க்கில் மண்ணை கொட்டியது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், பிடிபட்ட பரத்துடன், பாபுவின் மகள் நட்பாக பழகி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பரத் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், பரத்துடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.  இதனால், ஆத்திரமடைந்த பரத் தனது நண்பரான முகமது அப்சலுடன் சேர்ந்து, பாபுவின் மகள் மொபட்டின் பெட்ரோல் டேங்க்கில் மண்ணை கொட்டியது தெரியவந்தது.  இதனை அடுத்து பரத் மற்றும்  முகமது அப்சல் ஆகிய  இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Related Stories: