நகைக்கடை கொள்ளை வழக்கில் 7வது குற்றவாளி பிடிபட்டார்: 700 கிராம் தங்கம் பறிமுதல்

பெரம்பூர்:  பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள கே.எல் நகைக்கடையில் கடந்த மாதம் 10ம் தேதி வெல்டிங் மிஷினால் துளையிட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.  இதுகுறித்த புகாரின்பேரில் திரு.வி.க.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில்  தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனிடையே, பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கஜேந்திரன் (31) திவாகர் (28) ஆகிய இருவரையும் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்த கங்காதரன், ஸ்டீபன் ஆகிய இருவரையும் நீதிமன்ற அனுமதியோடு  சென்னை அழைத்து வந்த தனிப்படை போலீசார் இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதில் இரண்டு கிலோ தங்கம் பெங்களூருவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஐந்து நாள் போலீஸ் காவல் முடிந்து அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர்.  அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கங்காதரனை மட்டும் மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. மற்றொரு நபரான ஸ்டீபனை மீண்டும் தனிப்படை போலீசார் கர்நாடக சிறையில் ஒப்படைத்தனர்.  

இதனை அடுத்து  கங்காதரனை மேலும் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. பின்னர், கங்காதரனை அழைத்துக் கொண்டு தனிப்படை போலீசார் மீண்டும் பெங்களூரு சென்றனர். அங்கு கங்காதரன் யார் யாரிடம் நகைகளை கொடுத்து வைத்துள்ளார் என்பது குறித்து விசாரணை செய்தனர்.

இதில்,  கங்காதரன் தனது மனைவியான கீதா (26) மற்றும் அவரது மைத்துனரான ராகவேந்திரா (25) ஆகிய இருவரிடமும் நகைகளை கொடுத்து அதனை உருக்கி பணமாக்கியது தெரியவந்தது.  எனவே, கீதா மற்றும் ராகவேந்திரா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.   இவர்களிடமிருந்து 3 சொகுசு கார்கள் மற்றும் சுமார் 400 கிராம் தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டது. இதனை தொடர்ந்து, கங்காதரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் கர்நாடகா சிறையில் ஒப்படைக்கப்பட்டார். கீதா மற்றும் ராகவேந்திரா ஆகிய இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்நிலையில்,  இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அருண் (30) மற்றும் கவுதம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இதில், பெங்களூரு எபினி பகுதியில் பதுங்கி இருந்த அருணை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அருண் மீது ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கொலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.  இதுவரை இந்த வழக்கில் 5 கிலோ 750 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இன்னும் இந்த வழக்கில் கவுதம் என்ற ஒரு நபர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரிடம் சுமார் ஒரு கிலோ தங்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது.  தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

* கொலை மிரட்டல் அருண் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:  கொள்ளை  சம்பவம் நடந்து முடிந்த பிறகு, முக்கிய குற்றவாளியான கங்காதரன், அருணுக்கு  ரூ.20 லட்சம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த அருண்  தனக்கு அதிகமாக பங்கு வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும்  இடையே பலத்த தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருண், நான்  ஏற்கனவே கொலை  செய்தவன். எனக்கு உரிய பங்கு தரவில்லை என்றால், உன்னையும் கொலை செய்து  விடுவேன் என மிரட்டி உள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த கங்காதரன் பயந்து  போய் அவருக்கு ஒரு கிலோ தங்கத்தை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்து, பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலையத்தில் தனக்கு தெரிந்த போலீஸ் ஒருவர்  மூலமாக இரண்டரை கிலோ தங்கத்தை கொடுத்து கங்காதரனும், ஸ்டீபனும் சரணடைந்தனர். இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: