வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்  நடத்தினர். ஊத்துக்கோட்டை வட்டம் வேளகாபுரம் ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ்  மக்களுக்கு 1994ம் ஆண்டு 85 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் தீர்வு  கிடைக்கவில்லை. கடந்த வருடம் மார்ச் மாதம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தின்போது அப்போதைய தாசில்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு மாதத்தில் உங்கள் பட்டா இடங்களை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்வோம் என்றும் 3 மாதத்தில் 75 பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தும் கூட இதுவரை நிறைவேற்வில்லை.

எனவே வருவாய்த்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்து 85 வேட்டைகார பழங்குடியின மக்களுக்கு 1994 ல் கொடுக்கப்பட்ட பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 50 ஆண்டுகளாக வீடுகட்டி வாழ்ந்து வரும் 75 நபர்களுக்கு 29 ஆண்டுகளாக பட்டா வழங்காத வேளகாபுரம் விஏஒ மற்றும் வருவாய் ஆய்வாளரை கண்டித்தும் குடிமனை பட்டா வழங்கும்வரை காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று பாதிக்கப்பட்டோர் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.

இதில் மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் தமிழ் அரசு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், செல்வராஜ், சம்பத், கண்ணன், முருகன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கெங்காதுரை கண்டன உரையாற்றினார். பின்னர் தாசில்தார் வசந்தியிடம் மனு கொடுத்தனர். இதை பெற்றுக்கொண்ட தாசில்தார் உடனே பட்டா வழங்க முடியாது என்றார். இதை கேட்ட போராட்டக்காரர்கள் பட்டா வழங்கும்வரை போராட்டம் தொடரும் என காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: