சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று வேளாண்மை துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து, நாளை முதல் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குகிறது. வரும் வெள்ளிக்கிழமையும், 27ம் தேதியும் விவாதம் நடக்கிறது. 28ம் தேதி விவாத்திற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார்கள். 29ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை நடக்கிறது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் அனைத்து திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது. கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும். மேலும் மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை சட்டப்பேரவையில் எவ்வாறு பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும், நடந்து கொள்ளும் விதம் குறித்து பேசப்பட்டது அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Related Stories: