‘இன்று உலக சிட்டுக்குருவி தினம்’ அழிந்து வரும் சிட்டுக்குருவியை பாதுகாக்க உறுதியேற்போம்....

திருச்சி: முன்பெல்லாம் காலை நேரத்தில் வீட்டின் ஜன்னலில், மேற்கூரையில், வீட்டின் சுற்றுசுவர்கள் மீது கூட்டமாக வந்து அமர்ந்து ‘‘கீச்கீச்’’ என்று குரலில் சிட்டுக்குருவிகளின் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்று அந்த சத்தம் கூட நமக்கு மறந்து போகும் அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி வந்துவிட்டது....

ஒரு காலத்தில் சிட்டுக்குருவி இனங்கள் நம்மை சுற்றி பறந்துகொண்டிருந்தது. இன்று சொற்ப அளவிலேயே சிட்டுக்குருவி இனம் வாழ்ந்து வருவது இயற்கை ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்று நாம் வௌிநாட்டு பறவைகளை தேடி சென்று பார்த்து ரசிக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். சிட்டுக்குருவி இனம், வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அழிந்துகொண்டே வருகிறது.லட்சக்கணக்கில் வானில் பறந்த சிட்டுக்குருவிகள் இன்று காண்பதற்கே அரிய உயிரினமாக உள்ளது.

மனிதனின் ரசனைக்கு விருந்தளித்த சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் தேதி (இன்று) சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை கொண்டாடுவதன் முக்கிய நோக்கம், அழிந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ள இந்த அழகான சின்னச்சிறு சிட்டுக்குருவி பறவை இனத்தை காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதாகும். அதன் ஒருபகுதியாக பீகார் மாநிலத்தில் சிட்டுக்குருவியை 2010ம் ஆண்டில் மாநில பறவையாக அங்கீகரித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இந்த சிட்டுக்குருவி இனம் காணப்பட்டாலும், இந்தியாவில் இவற்றை பார்ப்பதே அபூர்வமாகி விட்டது. அதிலும், தமிழகத்தில் இந்த பறவைகளை பார்ப்பது என்பது கேள்விக்குறிதான்? பார்ப்பதற்கு உருவத்தில் மிகச்சிறியவையாக இருக்கும் இவற்றின் நீளம் அதிகபட்சம் 8 அங்குலம். எடை 0.8 முதல் 1.4 அவுன்ஸ் வரை இருக்கும். ஆண் மற்றும் பெண் சிட்டுக்குருவிகள் தோற்றத்தில் வேறுபட்டவை. பெண் குருவிகளை விட ஆண் சிட்டுக்குருவிகள் மிகவும் கவர்ச்சிகரமானவை. இவை குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை வாழும்.

சிட்டுக்குருவியை அதிக வல்லமையுள்ள பறவை என்று சொல்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எல்லா கால நிலையிலும் வாழும் திறன்படைத்தது. பொதுவாக இந்த குருவிகள் மணிக்கு 24 மைல் வேகத்தில் பறக்கும், குடியிருப்பு உள்ள பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் காண முடியும். மலைப்பகுதிகளில் காணமுடியாது. ஆனால் இன்று நாம் சாதாரணமாகக்கூட பார்க்க முடியாமல் போய்விட்டது. தொலை தொடர்பு, செல்போன் அலைக்கற்றைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு தான் காரணம்.

சிட்டுக்குருவிகள் உணவு மற்றும் இருப்பிடத்தை தேடி நகரங்களுக்கு இடம்பெயருகின்றன. ஏனெனில், கிராமங்களிலும் தற்போது மக்கள்தொகை அதிகமானதால் அதனால் உயிர்வாழ முடியவில்லை. சால்மோனெல்லா எனப்படும் நோய்கிருமி குளிர்காலத்தில் சிட்டுகுருவிகளை தாக்குகிறது. இதனால் 13 சதவீத குருவிகள் இறப்புக்கு காரணமாக உள்ளது.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,

மக்கள் தங்கள் வீடுகளில் சில பகுதியான அட்டைப்பெட்டிகள், பானைகள், மற்றும் கூடுகளை வைக்க வேண்டும். அங்கு குருவிகள் எளிதாக தங்கள் கூடுகளை உருவாக்கி அவற்றில் முட்டைகளை இடலாம். எனவே அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க இந்த தினத்தில் நாம் ஒவ்வொரு வரும் உறுதிமொழி எடுத்து கொள்வோமாக...

Related Stories: