வொர்க் அவுட்+டயட்= ப்யூட்டி!

நன்றி குங்குமம் டாக்டர்

ப்ரியங்கா மோகன்

ப்ரியங்கா மோகன் டான் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து 2k கிட்ஸ் முதல் தாத்தாக்கள் வரை பலரின் பல்ஸையும் எகிற வைத்த பர்பி டால் குயின். ஹோம்லி ப்யூட்டி என்பது இவரது ப்ளஸ். இந்த சிக்கென்ற அழகுக்கு காரணம் என்னவெனத் தேடினோம்.

ப்ரியங்கா ஒரு ஜிம் பிரியர். ஜிம்மில் மாங்கு மாங்கென வொர்க் அவுட் செய்வதை விரும்புபவர். அழகான உடலுக்கு ஆரோக்கியம் அவசியம் என்ற புரிதல் உடையவர். அதனால் தினசரி ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்யத் தவறுவதே இல்லை.ஜிம்மில் கார்டியோ பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தருவார். ட்ரெட் மில்லில் ஓடுவது, சைக்கிளிங் மிதிப்பது போன்ற கார்டியோக்கள் தன்னை உள்ளிருந்தே அழகாக்கும். குறிப்பாக, இதயம் போன்ற முக்கியமான ராஜ உறுப்புகளை வளப்படுத்தி, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தையும் சுறுசுறுப்பையும் தரும் என்கிறார். யோகாவும் ப்ரியாங்காவுக்குப் பிரியமான விஷயம்தான். யோகா தன் உடலை முறுக்கேற்றி வலுவாக்குகிறது என்றால் தியானம் மனதை அமைதிப்படுத்தி, மனக்குவிப்பு, ரிலாக்சேஷன் தருகிறது என்பது ப்ரியங்காவின் வலுவான கருத்து.

உடற்பயிற்சி போலவே உணவு விஷயத்திலும் ப்ரியங்கா ஸ்ட்ரிக்ட்தான். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்க டீடாக்ஸ் செய்ய வேண்டியது அவசியம். ப்ரியாங்காவின் எளிதான டீடாக்ஸ் ட்ரிக்ஸ் தண்ணீர் பருகுவதுதான். தினசரி மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர் பருகத் தவறுவதேயில்லை. இதனால், உடலில் தேவையற்ற கழிவுகள் நீங்கி அகமும் புறமும் பொலிவாகும். இயற்கையான தோற்றத்தைத் தரும்.

தினசரி காலையில் நான்கு டம்ளர் தண்ணீர் பருகியபின்புதான் அவரது நாளே தொடங்குகிறது. காலையில் அவித்த முட்டைகளையும் பழங்களையும் சாப்பிடுகிறார். அதுபோலவே புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், கார்போ நிறைந்த ஓட்ஸ் ஆகியவையும் காலை உணவில் இருக்கும்.மதிய உணவிலும் காய்கறிகள் கட்டாயம் இருக்கும். குறிப்பாக, அனைத்து வகையான பொரியல்கள், வறுவல்கள், சாலட்களையும் விரும்பிச் சாப்பிடுவார். சாதம் அளவாக எடுத்துக்கொள்வார். அரிசியின் கார்போஹைட்ரேட்டைவிட புரதச்சத்துக்கு முக்கியத்துவம் தருபவர் ப்ரியங்கா.

இரவில் கண்டிப்பாக வெள்ளை அரிசிக்கு தடா. அப்படியே கார்போ இருந்தாலும் டால் ரொட்டி சப்ஜி போன்ற கோதுமை கார்போதான் இருக்கும். ஏனெனில் கார்போ உடலில் தேவையற்ற கொழுப்பைச் சேர்க்கும் என்பது இவரது நம்பிக்கை.ப்ரியங்காவின் டயட் சார்ட்டை நோக்கும்போது அது ஓர் ஆரோக்கியமான பேலன்ஸ்டு டயட் என்று தோன்றுகிறது. இதனோடு வொர்க் அவுட்டும் முறையான ஓய்வும் சேரும்போது நிச்சயம் ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும்.

சருமப் பராமரிப்புக்கு பழங்கள் உடலுக்கு எவ்வளவு அவசியம் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால் தினசரி பழங்களை எடுத்துக்கொள்கிறார். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவற்றைத் தவறாமல் எடுத்துக்கொள்கிறார். இது தன் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ள உதவும் என்கிறார். தன்னை அழகாகப் பராமரிப்பதில் நடிகைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். அதில் ப்ரியங்கா தனிவிதம். சிடிஎம் எனப்படும் க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைசிங்களை அவர் எப்போதும் தவறவிட்டதே இல்லை.

அழகு சாதனப் பொருட்களை கடையில் போய் வாங்குவதைவிட வீட்டிலேயே மெனக்கெட்டுத் தயாரித்துப் பயன்படுத்துவதையே விரும்புகிறார். அதில்தான் அழகோடு வேதிப்பொருட்களின் ஆபத்தற்ற ஆரோக்கியமும் இருக்கிறது என்பது இந்த தேவதையின் அசைக்க முடியாத நம்பிக்கை.முகத்தை க்ளென்ஸ் செய்வதற்கு ரோஸ் வாட்டரில் கிளிசரினை கலந்து பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் முகம் மாசு மறுவற்று பொலிவோடு இருக்கும் என்கிறார்.எப்போதும் வெயிலிலும் சூட்டிங் மஞ்சள் ஒளி வெப்பத்திலும் இருக்கும் தொழில் என்பதால் தன் சருமத்தை, குறிப்பாக முகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். ப்ரியங்கா இதற்காக சிறந்த சன் ஸ்க்ரீன்களைப் பூசுகிறார்.

தொகுப்பு : கிருஷ்

Related Stories: