இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் யாரும் அறியாத தகவல்கள் போஸ்ட் நம்பர் 1-1175: நேரடி கள ஆய்வு

நாட்டின் எல்லையை பாதுகாப்பது யார் என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டே அனைவரும் ‘ராணுவம்’ என்றே கூறுவார்கள். ஆனால், நமது நாட்டின் எல்லையை பாதுகாப்பது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்தான் (பிஎஸ்எப்). ஒவ்வொரு எல்லைக்கும் ஒரு படை உருவாக்கப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்தான் நாட்டின் முதல் பாதுகாப்பு கவசம். ஆனால், ஜம்மு காஷ்மீர் மிகவும் பதற்றம் வாய்ந்தது என்பதாலும், எல்லை கட்டுப்பாடு கோடு உள்ளதாலும், அங்கு ராணுவம்தான் எல்லையை பாதுகாக்கிறது. அவர்களுடன் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதேநேரத்தில் இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-வங்கதேச எல்லையை ஒட்டு மொத்தமாக பிஎஸ்எப் வீரர்கள்தான் பாதுகாக்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள போஸ்ட் எண் 1-1175 வரை எல்லையில் உப்பளம், சதுப்பு நிலம், நீர் என பல்வேறு இன்னல்களையும் மீறி வீரர்கள்  தேசத்தை கட்டிக்காத்து வருகின்றனர். 1965ம் ஆண்டு குஜராத் மாநிலம், கட்ச் மாவட்ட எல்லையில் உள்ள சர்தார் போஸ்ட் என்ற பகுதியில் பாகிஸ்தான் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் போஸ்ட் நம்பர் 1115ல் பாதுகாப்பு பணியில் இருந்த ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படை, மாநில ஆயுதப்படையை சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு எல்லையை பாதுகாக்க பிரத்யேகமாக ஒரு படையை உருவாக்க அப்போதைய ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, அனைத்து மாநில ஆயுதப்படைகள் உள்ளடக்கிய ஒரு படையை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. டிச. 1, 1965ம் ஆண்டு பிஎஸ்எப் (எல்லை பாதுகாப்பு படை) உருவாக்கப்பட்டது. 23 பட்டாலியனில் தொடங்கிய பிஎஸ்எப் இன்று 194 பட்டாலியனாக உயர்ந்து உள்ளது. 1971ம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக நடந்த போரில், பிஎஸ்எப் வீரர்கள் முக்கிய பங்காற்றினர்.

பிஎஸ்எப் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளிலேயே முதல் போரை சந்தித்து, பாகிஸ்தானிடம் இருந்து பல பகுதிகளை மீட்டெடுத்தது.  இந்த போரில் வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும், பெருமையையும் போற்றும் வகையில் தர்மசாலா என்ற பகுதியில் போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவும்-பாகிஸ்தானும் 3,300 கிலோ மீட்டர் எல்லை பகுதியை பகிர்ந்து கொள்கிறது. இதில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் 1,023 கிலோ மீட்டரும், குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 500 கிலோ மீட்டரும் எல்லை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் போஸ்ட் நம்பர் 1 என்று தொடங்கி பஞ்சாப், ராஜஸ்தான் என நீண்டு குஜராத் மாநிலத்தில் போஸ்ட் நம்பர் 1175ல் இந்தியா-பாகிஸ்தான் எல்லை முடிவடைகிறது. எல்லை பகுதிக்கு ஏற்றவாறு போஸ்ட் நம்பர் அமைக்கப்பட்டுள்ளது. வறண்ட நிலப்பரப்பும், உப்பு பாலைவனமும், சதுப்பு நில பகுதிகளும் குஜராத்தின், பாகிஸ்தானுடனான எல்லையாக இருப்பதால் எல்லையை கண்காணிப்பதும் பாதுகாப்பை மேம்படுத்துவதும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு சவால் நிறைந்த பணியாகவே இருந்து வருகிறது. ஜூன் 16, 1819ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் (ரிக்டர் அளவில் 7.7 முதல் 8.2 ஆக பதிவு) 1,543 பேர் உயிரிழந்தனர். அப்போது, இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 400 கி.மீட்டர் தூரம் ஒரு பெரிய வட்டம் போல் அப்படியே புதைந்தது. கடல் மட்டத்தில் இருந்து பல அடி உயரம் கீழே சென்றது. இதனால், ஒரு ஆண்டில் உப்பளம், பாலைவனம், நீர் நிலை என பல பரிமாணங்களை இந்த மாவட்டம் சந்தித்து வருகிறது.

 கடல் மட்டத்தில் இருந்து கீழே சென்றதால், கடல் கொந்தளிப்பு மற்றும் மழை போன்ற இயற்கையின் வரங்களாக உருவானதுதான் எல்லையில் அமைந்துள்ள சுக்கூர் ஏரி. இந்த ஏரி 300 சதுர கிலோ மீட்டர் (74,131.6 ஏக்கர்) கொண்டது. இதில் 210 சதுர கிலோ மீட்டர் (54,892.1 ஏக்கர்) இந்தியாவிலும், 90 சதுர கிலோ மீட்டர் (22,239.5 ஏக்கர்) பாகிஸ்தானிலும் உள்ளது. இந்த ஏரியின் மைய பகுதியில் சாலை மற்றும் ஈரடுக்கு பாதுகாப்பு வேலியையும் அமைத்து இந்தியா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இயற்கை மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு பரிமாணங்களால் போஸ்ட் நம்பர் 1135-1175 வரை இருநாட்டு எல்லையும் உள்ளது. தடுப்பு வேலி இல்லாத இந்த 22 கிலோ மீட்டர் சதுப்பு நிலம்தான் ஹராமி நல்லா பகுதி என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் பணியாற்றும் ஒவ்வொரு வீரரும் கடும் சவாலான பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தனியாக ஒரு வீரர் மட்டும் செல்ல முடியாது. நான்கு, ஐந்து பேராக சென்றால் மட்டுமே இந்த சதுப்பு நிலத்தை கடக்க முடியும். இதற்கு முக்கிய காரணம், ஒவ்வொரு வீரரின் இடுப்பு அளவு சதுப்பு நிலம் சேற்றில் புதைந்துவிடும். இதனால், பிஎஸ்எப் வீரர்கள் ஒரு குழுவாக சென்று கயிற்றை கட்டியும், ஏணிகளை வைத்தும், நீள கம்புகளை வைத்தும் எல்லையில் தேசத்தை பாதுகாத்து வருகின்றனர்.  இவர்கள் ‘குரோக்கடைல் கமோண்டஸ்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்த பகுதியில் தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலிகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியின் வழியாக பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்று கூறப்படுவதால், நீர்நிலை பகுதியில் நவீன படகுகள், கப்பல்கள் மூலம் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு பணி மற்றும் வீரர்களை இடமாற்றுவது போன்ற பணிகளும் நடைபெறுகிறது.

வேலிகள் அமைக்கப்பட்ட மற்ற இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர, பேட்ரோலிங் என்ற முறையில் சுழற்சி பணியில் வீரர்கள் குழுவாக எல்லையை சுற்றிச்சுற்றி வருகின்றனர்.  உயரதிகாரிகளும் எல்லையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.  ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் எல்லையில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், ஊடுருவலை தடுக்கவும் தற்போது உள்ள வேலிகளை அகற்றி நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு திட்டத்தின் கீழ் அசாமில் நவீன பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணி முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டது. இந்த திட்டம், சட்டவிரோத ஊடுருவல், மனித கடத்தல், பொருட்கள் கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதம் போன்றவற்றை தடுக்க பெரும் உதவியாக இருக்கும்.  ஜம்மு மற்றும் அசாமில் 71 கி.மீட்டர் தூரத்துக்கு ‘ஸ்மார்ட் பென்ஸ்’ என்ற நவீன பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று எல்லையில் மொத்தம் 1955 கி.மீ தூரத்துக்கு ஸ்மார்ட் பென்ஸ் அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட உள்ளது.  முதல்கட்டமாக குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் மோகன் பில்லர் பகுதியில் 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்மார்ட் பென்ஸ் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதுதவிர, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வெளிநபர்கள் யாரேனும் ஊடுருவுகிறார்களா என்று தெர்மல் கேமரா, பதுங்கு குழிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பனியிலும், வெயிலிலும், சேற்றிலும், சகதியிலும், நீரிலும், நிலத்திலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்ச்சிகளையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர்களுக்கும் ராயல் சல்யூட். இந்த வீரர்களின் தியாகத்துக்கு இந்த தேசம் எப்போதும் தலை வணங்கும்.

* முன்னோடி திட்டமாக ஜம்மு மற்றும் அசாமில் 71 கி.மீ தூரத்துக்கு (இந்தியா-பாக். எல்லையில் 10 கி.மீ.,  இந்தியா-வங்கதேச எல்லையில் 61 கி.மீ.) முடிக்கப்பட்டுள்ளது.

* இந்தியா-பாக்., இந்தியா-வங்கதேச எல்லையில் 4 கட்டங்களாக 153 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

* இந்தியா-பாக்., இந்தியா-வங்கதேச எல்லையில் 67 கட்டங்களாக 1802 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

* பாதுகாப்பு  வேலிகள் சிறப்பு அம்சங்கள்கட் செய்ய முடியாது, துரு கூட பிடிக்காது. ஏறியும் குதிக்க முடியாது, விரலை நுழைக்க முடியாது வெளிநபர்கள் தொட்டால் சென்சார் காட்டி கொடுக்கும்.

*  எல்லையில் ஒவ்வொரு பகுதியையும் பில்லர் என்று அழைக்கிறார்கள். இந்த பில்லருக்கு போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

* எங்கெங்கு அமைகிறது நதி, டெல்டா மற்றும்  முகத்துவாரப் பகுதிகள் நீர் மற்றும் சதுப்பு நிலங்கள் சிற்றோடை பகுதிகள்  கடுமையான மூடுபனியால் பாதிக்கப்படக்கூடிய சமவெளிப் பகுதிகள் எல்லையில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மலைப்பகுதிகள் டிராபிகாக் காடு பகுதிகள் பாலைவனங்கள்

* இங்குள்ள பன்னி கிராஸ் லேன்ட்டில் மழை பெய்தால் தானாக புற்கள் வளரும். வெயில் அடித்தால் மறைந்துவிடும்.

* கட்ச் மாவட்டத்தில் ‘ரெட் ரைஸ்’, நிலக்கடலை, கம்பு போன்ற பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

* இங்குள்ள பன்னி எருமைகள் அதிகளவில் பால் சுரக்கும் என்பதால், ஒரு பன்னி எருமைரூ.7 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

* இந்திய எல்லையில் 60 கி.மீ. தூரம் மக்களுக்கு  அனுமதி இல்லை குஜராத்தின் கட்ச் மாவட்டத்தையொட்டிய இந்திய எல்லையில் இருந்து 60 கி.மீ. தூரத்திற்கு குடியிருப்புகள் எதுவுமில்லை. பொதுமக்களுக்கும் அனுமதியில்லை. அதேவேளையில், பாகிஸ்தான் எல்லையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து குடியிருப்புகள் தொடங்குகிறது.

* 1819ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடல் மட்டத்தில் இருந்து பல அடி தூரம் கீழ் சென்ற நிலப்பரப்பால் காலநிலைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை இந்த மண் சந்தித்து வருகிறது. அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஏற்படும் கடல் கொந்தளிப்பால் கடல்நீர் உள்புகுந்து நிலப்பரப்பை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டு பல மாதங்களாக தேங்கி நிற்கும். பின்னர் வெயில் காலத்தில் அந்த தண்ணீர் வடிய தொடங்கும். இந்த தண்ணீரில் உப்பு வளம் அதிகம் உள்ளதால், தண்ணீர் வடிந்தவுடன் அந்த பகுதி உப்பளமாக காட்சியளிக்கும்.

 இது ‘ரான் ஆப் கட்ச்சின் வைட் டெர்சட்’ (வெள்ளை பாலைவனம்) என்று அழைக்கப்படுகிறது. இந்த காட்சிகள் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவார்கள். இதுபோல், பவுர்ணமி நிலவை காணவும் ஏராளமானோர் வருகை தருவார்கள். இதை மையப்படுத்தி இந்த கால கட்டத்தில் ஆசியாவிலேயே பெரிய ‘டென்ட் சிட்டி’ உருவாக்கப்பட்டு, ‘ரன் உத்சவ்’ என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.

* குடியரசு தினத்தன்று பேரழிவை சந்தித்த கட்ச் மாவட்டம் 2001, ஜன. 26. குஜராத்தில் மரண ஒலி எழுப்பிய பயங்கர நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 7.7 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தால் 20,023 பேர் பலியாகினர். 1.67 லட்சம் பேர் படுகாயமடைந்தனர்.  4 லட்சம் வீடுகள் தரைமட்டமாகின.

* ஒன்றிய அரசின் உதவியால் அனைத்து துறையிலும் கால் பதித்து வரும் அதானி குழுமம் மீது அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட பங்கு சந்தை மோசடி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வறண்ட பாலைவனத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின்உற்பத்தி நிலையத்தை அதானி குழுமம் அமைத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மசாலா என்ற பகுதி, எல்லையில் இருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த பகுதி வரைதான் பொதுமக்கள் கடைசியாக அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு மேல் யாருக்கும் அனுமதியில்லை. இந்த பகுதியில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் (எல்லையில் இருந்து 40 கி.மீ தூரம்) உள்ள பாலவனத்தில் 72,000 ஹெக்டேரில் அதானி நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் (2 ஒன்றிய அரசின் நிறுவனங்கள், 2 குஜராத் அரசு நிறுவனங்கள், 2 தனியார் நிறுவனம்) இணைந்து ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின்உற்பத்தி நிலையத்தை அமைத்து வருகின்றன.

இந்த சோலார் மின்உற்பத்தி நிலையம் 30 ஜிகா வாட் உற்பத்தி செய்ய உள்ளது. அடுத்தாண்டுக்குள் 15 ஜிகா வாட்டும், 2026ம் ஆண்டுக்குள் முழு உற்பத்தியும் செய்யப்படும் என்று திட்டத்தின் தலைவர் வர்மா தெரிவித்து உள்ளார். சோலார் பேனல்கள் மீது படியும் தூசிகள் ரோபோடிக் மெஷின்கள் மூலம் தண்ணீரின்றி சுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு இந்த முறையை கடைபிடித்த அதானி குழுமம், ராமநாதபுரம் கமுதியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்உற்பத்தி நிலையத்துக்கு வைகை ஆற்றில் இருந்து பெரும் அளவிலான தண்ணீரை எடுத்து பிரச்னையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

* மீனவர்கள் மூலம் உளவு பார்க்கும் பாக். ராணுவம்

இந்திய எல்லையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே பாகிஸ்தானில் குடியிருப்புகள் தொடங்கி விடுகின்றன. இங்கு, ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்திய எல்லையை ஒட்டி உள்ள சுக்கூர் ஏரியில் மீன் பிடிக்கின்றனர். பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவை போன்ற தடுப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை. இதனால், இந்திய எல்லையில் பாக். மீனவர்கள் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு ஊடுருவிய 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 77 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எல்லையில் நம் நாட்டின் பிஎஸ்எப் வீரர்கள் கண்காணிப்பதுபோல், பாக். ராணுவம் கண்காணிப்பதில்லை. அவர்களிடம் போதுமான வீரர்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், ஏரியில் மீன்பிடிக்க வரும் மீனவர்களிடம் இந்திய எல்லையில் இருந்து யாரேனும் ஊருடுவி வந்தார்களா என்று தினமும் கேட்டு அறிவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: