சமூக பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 5,815 பயனாளிகளுக்கு முறைகேடாக உதவித்தொகை: அதிமுக ஆட்சியில் நடந்த மோசடி அம்பலம்

* ஒரு நபருக்கு 2 திட்டத்தில் பணம்

* உடந்தையாக இருந்த அதிகாரிகள் பட்டியல் சேகரிப்பு

சிறப்பு செய்தி: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் வங்கி கடன் உதவி மற்றும் திட்டங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை, திருமண நிதியுதவி, இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண சலுகை, தமிழ்நாடு மாற்றுத்திறாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூகநல பாதுகாப்பு திட்டங்கள், பாதுகாவலர் சான்று, மாநில அரசு விருதுகள் மற்றும் ஒன்றிய அரசு விருதுகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ், 40 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி நலத்திட்ட உதவித்தொகை பெறலாம். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த திட்டங்களில் உதவித்தொகை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட தமிழ்நாடு முழுவதும் போலியாக மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை அச்சிட்டு வழங்கி இருப்பது அம்பலமாகி உள்ளது.

இதன் மூலம் லட்சகணக்கனில் மோசடி செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோசடியில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கடந்தாண்டு கைது செய்தனர். இந்நிலையில், சமூகபாதுகாப்பு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என இரு துறைகளிலும் ஒரே பயனாளி இரு உதவித்தொகை பெறுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துறைகளில் இருந்தும் ஒரே பயனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றியவர்கள், முதுகு தண்டுவடம், தசை சிதைவு நோய் பாதித்தவர்களுக்கும், தொழு நோய், நாள்பட்ட நரம்பியல் நோய், தண்டுவட மரப்பு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

முதலில் சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று வந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மற்றொரு திட்டத்தில் விண்ணப்பித்து உதவித்தொகை பெற்று வருவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் அந்தந்த மாவட்டங்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் இரு துறைகளின் கீழ் சில பயனாளிகள் உதவித்தொகை பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் இரு வங்கி கணக்குகள் தொடங்கி ஒரு வங்கி கணக்கில் ஒரு திட்டத்திலும், மற்றொரு வங்கி கணக்கை வைத்து மற்றொரு திட்டத்திலும் என 5,815 பேர் இரு துறைகளின் கீழ் உதவித்தொகை பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டிற்கு சமூகபாதுகாப்பு திட்ட அதிகாரிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளும் ஒரு சிலர் அதிமுக ஆட்சிக்காலத்தில் உடந்தையாக இருந்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவித்தொகையை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 உதவித்தொகை பெறுபவர்கள்

மாவட்டம்    எத்தனை பேர்

அரியலூர்    62

செங்கல்பட்டு    199

சென்னை    330

கோவை    152

கடலூர்    319

தர்மபுரி    100

திண்டுக்கல்    80

ஈரோடு    140

கள்ளக்குறிச்சி    78

காஞ்சிபுரம்    89

கன்னியாகுமாரி    118

கரூர்    51

கிருஷ்ணகிரி    173

மதுரை    425

மயிலாடுதுரை    57

நாகப்பட்டினம்    51

நீலகிரி    25

பெரம்பலூர்    23

புதுக்கோட்டை    178

ராமநாதபுரம்    50

ராணிப்பேட்டை    55

சேலம்    567

சிவகங்கை    131

தென்காசி    14

தஞ்சாவூர்    56

தேனி    33

தூத்துக்குடி    17

திருச்சி    155

திருநெல்வேலி    114

திருப்பத்தூர்    96

திருப்பூர்    332

திருவள்ளூர்    118

திருவண்ணாமலை    289

திருவாரூர்    49

வேலூர்    214

விழுப்புரம்    285

நாமக்கல்    590

* போலி அட்டை ஒழிக்கும் பணி தீவிரம்

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் இதை பயன்படுத்தி மோசடி செய்யும் பணியில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது. அப்பாவி பொதுமக்களிடம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வாங்கி தருவதாக கூறியும், நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியும் ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்களே போலியாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை தயாரித்து வழங்கி உள்ளனர். இதன் மூலம் போலியான பயனாளிகள் பல ஆண்டுகளாக பயனடைந்து வந்தனர். இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு போலி மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை ஒழிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களின் உடலில் உள்ள குறைபாடு குறித்து மருத்துவக்குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் முழுமையாக போலி மாற்றுத்திறனாளிகள் ஒழிக்கப்பட்டு, உண்மையான பயனாளிகளுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: