தும்மினால் இனி முகம் சுளிக்க தேவையில்லை!

நன்றி குங்குமம் தோழி

என் பாட்டி பதினாறு பிள்ளைகள் பெற்றார்கள் என்று நம் முன்னோர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். ஒரு நிமிடம் மலைப்பாக இருந்தாலும் இன்றைய சூழலில் அது சாத்தியமே இல்லை என்பதுதான் நிதர்சனம். ஒரு குழந்தையை பெற்று அதை சீராட்டி பாராட்டி வளர்ப்பதே பெரிய விஷயமாக உள்ளது. அதே சமயம் அந்த பிள்ளை பிறந்த பிறகு ஒரு பெண் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. அதாவது அறுவை சிகிச்சை செய்யாமல் சாதாரண முறையில் குழந்தையை பெற்றெடுக்கும் போது பெண்களின் பிறப்புறுப்பில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அங்குள்ள பல தசைகள் தளர்ச்சியடைவதால், அந்த பெண் ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ் (Stress Urinary Incontinence), சிறுநீர் கசிதல் பிரச்னைக்கு தள்ளப்படுகிறாள் என்கிறார் ஐ.வி.எப் ஸ்பேசியலிஸ்ட் மற்றும் அழகியல் மகளிர் மருத்துவ நிபுணர் சாமுண்டி  சங்கரி.

 ‘‘டெக்னாலஜி வளர்வதற்கு முன் இந்த பிரச்சனைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மட்டுமே தீர்வாக வைத்திருந்தனர். இப்போது இந்த தசை தளர்ச்சி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சிறுநீர் கசிதல் பிரச்னையையும் எளிதாக சரி செய்யமுடியும். பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் சிறுநீர் கசிதல் மற்றும் பிறப்புறுப்பில் தளர்ச்சி வராமல் இருக்க கிஜல்’ஸ் (Kegel’s Exercises) என்னும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அப்படி செய்வதினால் தசைகள் வலுப்பெறும். இவற்றை செய்யாத பெண்களுக்கு, இருமும்போதும், தும்மும்போதும் சிறுநீர் கசிவு ஏற்படலாம். இதனால் ஒரு பெண் உடல் ரீதியாய் பாதிக்கப்படுவதோடு, மனரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்படுகிறாள். குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள். இந்த பிரச்னையால் ஒரு சிலர் டயப்பர் அணிந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

பொதுவாக நார்மல் டெலிவரியாகும் போது, அவர்களின் பிறப்புறுப்பின் வாய் வழியாக குழந்தையின் தலை வெளியேறும். அந்த சமயம் அங்குள்ள தசைகள் குழந்தையின் தலையின் அளவிற்கு ஏற்ப விரிந்து கொடுக்கும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவை பழைய நிலைக்கு திரும்பிவிடும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு ஏற்கனவே ஏற்பட்ட தளர்ச்சி காரணமாக அவை நாளடைவில் இருகாமல், பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். இதனால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படும். கணவன்-மனைவி இருவரிடையே விரிசலும் ஏற்படலாம்.

சில பெண்களுக்கு சிறுநீர் கசிவதால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்புண்டு. இதற்கு ஒரே தீர்வு பெமிலிபிட் (Femilift). லேசர் கதிர் விசைகளைக் கொண்டு கொலாஜெனை மறுவடிவமைப்பு படுத்தி தசைகளை வலுவூட்டி பிறப்புறுப்பு திசுக்களை இறுக்கமாக்கும். அதாவது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெமிலிபிட்டின் லேசர் கதிர்களை செலுத்தும்போது அது பிறப்புறுப்பு வாய் பகுதியில் கொலாஜென் உற்பத்தி மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தசை தளர்ச்சியினை  நீக்குகிறது. இதனால் இருமும்போதும், தும்மும்போதும் சிறுநீர் கசிவு ஏற்படாது. தாம்பத்திய உறவிலும் நெருக்கமுண்டாகும்.

நார்மல் டெலிவரியான எல்லா பெண்களும் இச் சிகிச்சையை எடுத்தால் இந்த பாதிப்பினை முற்றிலும் தவிர்க்கலாம். மேலும், 45 முதல் 55 வயதுக்கு மேல் பெண்கள் மெனோபாஸ் பிரச்னையை சந்திக்கிறார்கள். இதனால் ஏற்படும் தசை தளர்வுக்கும் இச்சிகிச்சை சரியான தீர்வு’’ ’’ என்றவர் இதனை அழகியல் சிகிச்சையாகவும் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்.

‘‘சில பெண்கள் பிறப்புறுப்பு சருமத்தின் நிறம் உடலைவிட கருப்பாக இருப்பதைக் குறித்து மிகவும் கவலைப்படுவர். அவர்களுக்கு இதன் மூலம் வெண்மையாக்கலாம். மேலும் நீண்ட கால அரிப்பு, தொற்று போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக உள்ளது. இது ஒரு காபி பிரேக் சிகிச்சை என்று சொல்லலாம். 20 நிமிடங்கள் தான் சிகிச்சையின் நேரம் என்பதால், ஓய்வு தேவையில்லை. மூன்று முதல் நான்கு முறை இச்சிகிச்சையை செய்தால் 90% மாற்றத்தை உணர முடியும்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் சாமுண்டி சங்கரி.

தொகுப்பு: நிஷா

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: