ஆரோக்கிய உணவுப் பழக்கமே சீரான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்!

நன்றி குங்குமம் தோழி

‘உடல் எடையை குறைக்க நான் இந்த டயட்டை தான் ஃபாலோ செய்றேன்’ என்று சொல்வது இப்போது ஃபேஷனாகிவிட்டது. டயட் என்ற முறை ஏற்பட காரணம் என்ன? அதை எவ்வாறு முறைப்படி பின்பற்ற வேண்டும்? என்பதைப் பற்றி விளக்கமளிக்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.‘‘முன்பு பள்ளிக்கு நடந்தோ அல்லது சைக்கிளில் செல்வது வழக்கம். வீட்டு வேலையும் செய்வார்கள். இப்போது எல்லாமே  தலைகீழாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் நடந்து செல்வதில்லை.

பக்கத்து கடைக்கு செல்வதாக இருந்தாலும் வாகனத்தில் செல்கிறார்கள். இதில் கொரோனா மேலும் இவர்களை சோம்பேறியாகிவிட்டது. இங்கேயே நம் உடலுக்கு தேவையான உடற்பயிற்சி முறைகள் துண்டிக்கப்படுகிறது. மேலும் நம்முடைய பாரம்பரிய உணவுகளை  மறந்து துரித உணவு மற்றும் புதுப்புது உணவுகளை சுவைக்கிறோம். ஆன்லைனில் ஆப்கள் விரும்பும் உணவினை வீட்டிற்கே சப்ளை செய்கிறது.

இப்படி கலப்படம் நிறைந்த உணவுகளை சாப்பிட பழகிவிட்டோம். சொல்லப்போனால் நம் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. அதற்கு ஏற்ப அவரவர் தங்களுக்கு பிடித்த டயட்டினை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். ஒரு உணவு ஆலோசகராக என்னைக் கேட்டால் குறிப்பிட்ட டயட்டினை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் பாரம்பரிய உணவினையே சரிவிகிதத்தில் சாப்பிட்டாலே ஆரோக்கியம் மட்டுமில்லாமல், நம்முடைய உடல் எடையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளமுடியும்’’ என்றவர் ஒருவர் என்ன மாதிரியான உணவினை சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

‘‘நம்முடைய உணவு முறை காலை சிற்றுண்டி இட்லி, தோசையில் ஆரம்பித்து மதியம் சாம்பார், சாதம், கூட்டு, பொரியல், இரவு நேரம் சாதம் அல்லது ஏதாவது ஒரு டிஃபன், படுக்கும் முன் ஒரு டம்ளர் பால் என்பது தான்.  உணவு பொறுத்தவரை நாம் வாழும் இடம், சீதோஷ்ணநிலைப் பொருத்து தான் அமையும். இதில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் பிரச்னைகள் ஏற்படும். இதை கட்டுப்படுத்த ஆரோக்கிய டயட் மற்றும் உடற்பயிற்சி இருந்தாலே நம்முடைய பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.

டயட் இருக்கிறேன் என்று பட்டினி இருப்பதால்  இந்த நிலை மாறாது. நம் முன்னோர்கள் விரதம் இருப்பாங்க.  அந்த நேரத்தில் திரவ ஆகாரம் மட்டுமே சாப்பிடுவார்கள். விரதம் முடிந்ததும் தோசை இட்லி... எளிதில் செரிமாமானமாகக்கூடிய உணவினை சாப்பிடுவார்கள். மாதம் ஒரு நாள் இவ்வாறு கடைப்பிடிக்கும் போது, நம் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி டீடாக்ஸ் செய்யப்படும். பிரத்யேகா டயட் அவசியமில்லை. ஒவ்வொரு டயட்டிலும் குறிப்பிட்ட சத்துக்கள் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு டயட்டில் புரதம் மட்டும் அதிகம் சாப்பிடுவார்கள். மற்றதில் நார்சத்து அதிகம் இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவினை பின்பற்றினாலே போதுமானது.

இதில் துரித உணவுகள், அதிக அளவு சர்க்கரை, இனிப்பு வகைகள், மைதா, பேக்கரி உணவுகளை குறைத்தாலே நம்முடைய எடை தானாக குறைய ஆரம்பிக்கும். ஒரு மாசத்தில் இரண்டரை முதல் மூன்று கிலோ வரை எடை குறைந்தால்தான் நாம் ஆரோக்கிய முறையில் உடல் எடையினை குறைக்கிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். சிலர் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அது எல்லாருக்கும் அவசியமில்லை. எழுந்து நடக்கவே முடியாத நிலையில் இருப்பவர்கள் டாக்டரின் ஆலோசனைபடி இது போன்ற சிகிச்சையினை மேற்கொள்ளலாம். சாதாரணமாக இருப்பவர்கள் முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் ஏழு மணி நேர தூக்கத்தினை பின்பற்றினாலே போதும்’’ என்றவர் பொதுவாக அனைவரும் பின்பற்றக்கூடிய டயட் சார்ட்டினை வழங்கினார்.

‘‘காலை எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பது சிலருக்கு வழக்கமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் கிரீன் டீ அல்லது கஷாயம் போல் வைத்து குடிக்கலாம். இல்லை என்றால் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் காபி அல்லது டீயினை குடிக்கலாம். காலை சிற்றுண்டி இட்லி, தோசை, சப்பாத்தி, கோதுமை பிரட், காய்கறிகள் கொண்ட கிச்சடி போன்ற உணவுகளை சட்னி, சாம்பார் கொண்டு சாப்பிடலாம். தேவைப்பட்டால் வேகவைத்த முட்டை, முளைக்கட்டிய பயிறு கூட எடுத்துக் கொள்ளலாம்.

தோசை மாவு அரைக்கும் போது அரிசியுடன் சிறிதளவு சிறுதானியம் ஏதாவது ஒன்றை (வரகு, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி...) ஊறவைத்து அரைத்து தோசை அல்லது இட்லியாக சுட்டு சாப்பிடலாம். சப்பாத்தி மாவு பிசையும் போதும், இந்த மாவினை சேர்த்து பிசைந்து கொள்ளலாம். கடைகளில் மல்டிகிரைன் கோதுமைமாவு விற்கப்படுகிறது. அதையும் பயன்படுத்தலாம்.

பகல் பதினோறு மணிக்கு அலுவலகம் செல்பவர்களுக்கு டீ காபி சாப்பிட பிரேக் இருக்கும். அந்த நேரத்தில் ஒரு கேரட், மாதுளை, ஆப்பிள், சூப், இளநீர், மோர் போன்றவற்றை சாப்பிடலாம். டீடாக்ஸ் பானத்தை ஒரு பாட்டில் வைத்துக் கொண்டு அவ்வப்போது குடித்துவர உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுத்தன்மை வெளியேறும். (டீடாக்ஸ் - கொத்தமல்லி, புதினா, இஞ்சி சேர்த்து அரைத்து வடிக்கட்டி அதில் எலுமிச்சைசாறு சேர்த்து பருகலாம்).

மதிய உணவில் கொஞ்சமாக சாதம் எடுத்துக் ெகாண்டு காய்கறி, கூட்டு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். தினம் ஒரு கீரை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். அசைவ பிரியர்கள் சிக்கன், முட்டை அல்லது மீன் சாப்பிடலாம். சாதாரண அரிசிக்கு பதில் மாப்பிள்ளை சம்பா, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை சாப்பிடலாம். மாலை நேரத்தில் சுண்டல், சூப், இரண்டு ரஸ்க் எடுத்துக் கொள்ளலாம்.

இரவு இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இரவு நேர உணவினை ஏழு முதல் ஏழரை மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும் முன் பசித்தால் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள், மிளகு சேர்த்து பருகலாம். தேவைப்பட்டால் அரை ஆப்பிள் சாப்பிடலாம். இது போன்ற சமவிகித உணவினை சாப்பிட்டு வந்தாலே உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நட்ஸ், உலர்ந்த பழங்கள், பட்டை, மிளகு, எலுமிச்சை சார்ந்த கஷாயம் எடுத்துக் கொள்ளலாம்.

இவை எல்லாம் உணவு முறையில் கடைப்பிடித்தாலும் தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் திடீரென்று ஒருவருக்கு ஒரே மாதத்தில் 5 முதல் 10 கிலோ மேல் எடை குறைந்தால் பிரச்னை ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வு அதிக எடை உள்ளவர்களுக்கு ஏற்படலாம். ஆனால் சாதாரணமாக உள்ளவர்கள் அவர்களின் சராசரி எடையினை அடைய மாதம் இரண்டரை முதல் மூன்று கிலோ குறைத்தால் போதுமானது. அதுவே ஆரோக்கியமான முறையாகும். இல்லை என்றால் அவர்களின் தசைகளில் வலு குறைந்து உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது’’ என்று ஆலோசனை வழங்கினார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.

தொகுப்பு: ஷன்மதி

Related Stories: