டெல்லி மாநகராட்சியை இழந்தது பாஜக; ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றி: காங்கிரஸ் பலத்த சறுக்கல்..!

டெல்லி: 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. டெல்லி மாநகராட்சியை 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 தேர்தலில் பாஜ கைப்பற்றி வருகிறது. 2007ல் ஒரு மாநகராட்சியாக டெல்லி இருந்தது. கடந்த 2012 தேர்தலில் டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது. இந்த 3 மாநகராட்சிகளுக்கும் 2012, 2017ம் ஆண்டு தேர்தல் நடந்தது. பாஜவே வெற்றி பெற்றது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடந்தாலும், மாநகராட்சி தேர்தலில் பாஜவின் கையே ஓங்கியிருந்தது.

தற்போது 250 வார்டுகள் கொண்ட ஒரே மாநகராட்சியாக மாற்றப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. பாஜ, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையேதான் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தற்போதைய தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி சார்பில் மொத்தம் 250 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானதால் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். மொத்தம் 1.45 கோடி வாக்காளர்களுக்காக 13,638 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 50 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் டெல்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 42 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்தல் அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்தது. அதற்கு பிறகு ஆத் ஆத்மி, பாஜக என மாறி முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் மொத்தம் உள்ள 250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற 134 இடங்களில் பெரும்பான்மை பெற வேண்டும் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி அந்த இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் வெற்றி பெற்றதால் டெல்லி மாநகராட்சி ஆம் ஆத்மி வசமானது.

பாரதிய ஜனதா கட்சி 97 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும் வெற்றிபெற்றது. 2007 முதல் 3 முறை வென்று டெல்லி மாநகராட்சியை பாஜக தக்க வைத்த நிலையில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆம் ஆத்மியிடம் டெல்லி மாநகராட்சியை பாஜக இழந்தது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: