கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்-விவசாயிகள் கவலை

கொடைக்கானல் : கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் காட்டு பன்றிகள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலை பகுதி கிராமமக்கள் விவசாயத்தையே முழுமையாக செய்து வருகின்றனர். இங்கு கேரட் முள்ளங்கி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக விளைநிலங்களில் புகும் காட்டுப்பன்றிகள், பயிர்களை நாசம் செய்வதோடு விளைந்த காய்கறிகளையும் முழுமையாக அழித்து விடுகிறது. இதில் மன்னவனூர் ஊராட்சிக்குட்பட்ட கவுஞ்சி கிராமப்பகுதியில்  அறுவடைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் விளைந்திருந்த கேரட் பயிர்களை, காட்டுப்பன்றிகள் நாசம் செய்து விட்டன. இதுபோல் ஒவ்வொரு விளைநிலத்திலும் ஏற்பட்டுள்ள நஷ்டம் லட்சங்களை தாண்டும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்தாலும் அதில் சிக்கி இறக்கும் வனவிலங்கினங்களால் விவசாயிகள் குற்ற வழக்குகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் இல்லாமல் விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்கினங்களை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுவரை வனவிலங்குகளால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தினை விவசாயிகளுக்கு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: