நூல் விலை ஏற்றம், இறக்கம் எதிரொலி விசைத்தறி துணி உற்பத்தி மந்தம்

பல்லடம் :  நூல் விலை ஏற்றம், இறக்கம், மூலப்பொருள் விலை உயர்வு, ஊதியம், மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி துணி உற்பத்தி  மற்றும் அதன் சார்பு தொழில்கள் மந்தமடைந்துள்ளது. திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.  தறியில் துணி உற்பத்தி செய்ய பாவுநூல் மிகவும் அவசியமானது.

இதனை சைசிங் மில்கள் உற்பத்தி செய்து விசைத்தறியாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் 200 சைசிங் மில்கள் இயங்கி வருகின்றன. ஒரு சைசிங் மில்லில் 50 பேர் வரை வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒரு சைசிங் மில்லில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் கிலோ பாவு நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. 20 கவுன்ட் பாவு நூல் 1 கிலோ உற்பத்தி செய்ய ரூ.23 அசல் செலவு ஆகிறது.

ஒரு சைசிங் மில்லில் 5 ஆயிரம் இழை ஒட்டினால் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள பாவுநூல் உற்பத்தி செய்ய இயலும். 200 சைசிங் மில்களின் மூலம் தினசரி ரூ.2 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள 12 லட்சம் கிலோ பாவு நூல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நூல் விலை ஏற்றம், இறக்கம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் ஊதியம் உயர்வு, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி துணி உற்பத்தி மற்றும் அதன் சார்பு தொழில்கள் மந்த கதியில் இயங்கி வருகிறது.

இதுகுறித்து பல்லடம் சைசிங் மில் உரிமையாளர் ராஜசேகரன் கூறியதாவது: மாவட்டத்தில் 200 சைசிங் மில்கள் இயங்கி வருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து விறகு விலைக்கு வாங்கி கொண்டு வரப்படுகிறது. முன்பு பல ஜாதி விறகு ஒரு டன் விறகு ரூ.3500க்கு விற்றது. தற்போது மழை காலம் என்பதால் ரூ.4 ஆயிரமாகவும், முன்பு வேலி விறகு ஒரு டன் ரூ.4800 விற்றது. தற்போது ரூ.5600 ஆகவும் விலை உயர்ந்து விட்டது.

அதே போல் ஜனவரி மாதம் ஆட்கள் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதனை அரசு குறைத்து வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்க வேண்டும். வட மாநிலங்களை சேர்ந்த துணி மொத்த கொள்முதல் வர்த்தகர்கள் புதியதாக துணி ஆர்டர் எடுப்பதில்லை. அவர்களிடமும், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் பல கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. நூல் விலை அதிகம் கொடுத்து வாங்கி துணி நெசவு செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கும்போது நூல் விலை குறைந்து விடுகிறது. அதற்கேற்ப உற்பத்தி செய்யப்பட்ட துணி விலையை குறைத்து வர்த்தகர்கள் பேரம் பேசுகின்றனர்.

இதனால் துணி மீட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். துணி உற்பத்திக்கு மூல பொருட்களான பருத்தி, பஞ்சு ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் உள்நாட்டு தேவைக்கு ஆண்டு முழுவதும் சீரான சலுகை விலையில் நூல் ரகங்கள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதோடு ஆயத்த ஆடைகளாக மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழி வகை செய்தால் மேலும் பல லட்சம் பேர் பயன் அடைவர். நாட்டுக்கும் கூடுதலாக அன்னிய செலவானி கிடைக்கும்.

நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக துணி நெசவு தொழில் மூலம் தான் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு இத்தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விசைத்தறி கூடங்கள் கண்காட்சி பொருளாக உருமாறும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: