60வது ஊர்க்காவல் படை தொடக்க விழா காவல் பணி தேர்வில் வெற்றி பெற்று சேவை வழங்க வேண்டும்-திருப்பதி எஸ்பி பேச்சு

திருப்பதி : தகுதியுடைய ஊர்க்காவல் படையினர் அனைவரும் காவல் பணி தேர்வில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி உயர்நிலைக்கு சென்று வருங்காலத்தில் காவல் துறைக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்று திருப்பதியில் நேற்று நடைபெற்ற 60வது ஊர்க்காவல் படை தொடக்க நாள் விழாவில்  எஸ்பி பரமேஸ்வர் பேசினார்.

திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவலர் விளையாட்டு மைதானத்தில் 60வது ஊர்க்காவல் படையின் தொடக்க நாள் விழா நேற்று நடைபெற்றது. எஸ்பி பரமேஸ்வர் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது: ஒரு வெகுமதியையும் எதிர்பார்க்காமல் தன்னலமின்றி சேவையாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தனது வாழ்த்துகள். காவல்துறையினருடன் ஒப்பிடும் போது நீங்கள் எவ்வளவு வசதிகள் குறைவாக இருந்தாலும், சில சமயங்களில் அவர்களை விட அதிகமாக சேவை செய்கிறீர்கள். மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது இங்கு பணிச்சுமை அதிகம். இங்கு திருவிழாக்கள், போக்குவரத்து பணிகள், விவிஐபி ஏற்பாடுகள், பிரமோற்சவம் என பல்வேறு பணிகளை செய்ய வேண்டி உள்ளது. காவல் நிலையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால் அதேபோன்று பணிகளை செய்து வருகின்றனர். கடமையை நிறைவேற்றுவதில் எத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் கடமையை ஆற்றிய உங்களுக்கு எனது சிறப்பு நன்றி.

கடந்த 1962ம் ஆண்டு சீனாவுடனான போருக்கு பிறகு ஜெனரல் கரியப்பா, சேவை படைகள் மற்றும் தகவல் வழங்குநர் அமைப்பு போன்ற படைகளை குவித்து, காவல் துறையில் அவர்களின் சேவைகளை பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன் நாடு முழுவதும் ஊர்க்காவல் படையினர் என்ற அமைப்பை உருவாக்கினார். முதலில் விஜயவாடாவில் ஏற்படுத்தப்பட்டது.

திருப்பதி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் 820 ஊர்க்காவல் படையினர் பணியாற்றுகின்றனர். பெரும்பாலானோர் ஹோம் கார்டில் சேர்ந்த பிறகு இது போதும் என்று நினைக்கிறோம். நீங்கள் உங்கள் வேலையை மேம்படுத்தி வளர்க்க வேண்டும்.

கொரோனா காலத்திலும் தளராத துணிச்சலுடன் முன் வரிசை வீரர்களாக உங்கள் கடமைகளை செய்தீர்கள். மாநில அரசும், டிஜிபியும் ஊர்க்காவல் படையினரின் நலனுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். பெண் ஊர்க்காவலர்களுக்கு 3 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின் போது ₹5 ஆயிரம் நிதியுதவி மற்றும் ஊதியத்துடன் 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட்டது. தகுதியுள்ளவர்களுக்கு ஒய்எஸ்ஆர் மருத்துவ அட்டை, வீட்டு மனை பட்டா வழங்குவது, வீட்டு மனைகள் கிடைக்காவிட்டால் அவர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்.

ஆக்சிஸ் வங்கி மூலம் ₹3 லட்சம் கடன் வசதி செய்யப்பட்டுள்ளது. விபத்து மத்திய நல நிதியின் கீழ் ₹20 ஆயிரம் மற்றும் துரதிர்ஷ்டவசமான உயிரிழந்தால் ₹5 லட்சம், பணியின் போது இறந்தால் ₹10 லட்சம் வழங்கப்படும். விபத்து ஏற்பட்டால் சக ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

கொரோனாவால் உயிரிழந்த ஊர்க்காவல் படையினருக்கு மாநில அரசு மற்றும் டிஜிபி சார்பில் ₹10 லட்சம் நிதியுதவியும், கருணை பணி நியமனத்தின் கீழ் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் வழங்கப்படும். இச்சூழலில் ஒரு நாள் ஊதியத்தை பங்களிப்பாக வைத்து கொண்டு, இறந்தவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவி செய்வதன் மூலம் ஊர்க்காவல் படையினரின் மேன்மையை காட்டுவது பாராட்டுக்குரியது. சக ஊழியர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.

காவலர் பணி நியமனங்களில் வயது வரம்பு 37 மற்றும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுடைய ஊர்க்காவல் படையினர் அனைவரும் தேர்வில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி உயர்நிலைக்கு சென்று வருங்காலத்தில் காவல் துறைக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு எஸ்பி உணவு வழங்கினார். முன்னதாக, சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு சான்றிதழ் வழங்கினார்.

Related Stories: