கம்பம் புதிய பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கம்பம் : கம்பம் புதிய பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியில் உள்ள கம்பம் நகரில் இருந்து மதுரை,திண்டுக்கல், திருச்சி,ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக உள்ள இங்கு இதர தனியார் வாகனங்கள் அத்துமீறி வரக்கூடாது என காவல் துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை யாரும் கண்டு கொள்ளாமல் கார்,ஜீப்,டிராக்டர் மற்றும் டூவிலர்கள் அதிகளவில் வந்து செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் அவ்வப்போது சிறு,சிறு விபத்துகளும் நடைபெறுகிறது. மேலும் இது சம்பந்தமாக தனியார் வாகன உரிமையாளர்களுக்கும், போக்குவரத்து கழக பணியாளர்களுக்கும் தேவையில்லாமல் தகராறுகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. போலீசார் அவ்வப்போது வந்து நடவடிக்கைகள் எடுத்தாலும் இதை முற்றிலும் தடுக்க முடியவில்லை.

இது குறித்து ஒரு சிலர் கூறுகையில்,‘‘தமிழகத்தில் பெரும்பாலான பஸ் நிலையங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு அத்துமீறி உள்ளே வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதேபோல் கம்பம் பஸ் நிலையத்திலும் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு இதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: