கோத்தகிரியில் கேரட் விளைச்சல் அமோகம்

*கொள்முதல் விலை அதிகரிப்பு

*விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி : கோத்தகிரியில் கேரட் மகசூல் அதிகரித்ததுடன் கொள்முதல் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, குருகத்தி, கைக்காட்டி, கேர்கம்பை மற்றும் பில்லிக்கம்மபை  ஆகிய பகுதிகளில் கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளது.

கோத்தகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் பயிரிடப்படுகிறது. தொழிலாளர் பற்றாக்குறை, விதை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வனவிலங்குகள் தொல்லை ஆகிய பிரச்னைகளுக்கு இடையே விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் கோத்தகிரியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

இதனால் காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து விளை நிலங்கள்  பசுமையாக காட்சி அளிக்கிறது.

தற்போது கேரட் விளைச்சல் அதிகரித்து உள்ளது.  இதுபற்றி  விவசாயிகள் கூறும்போது, ‘இன்னும் ஓரிரு வாரங்களில் கேரட் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை, முகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதால் மலைகாய்கறிகள் அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோ ஒன்று ரூ.90 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதே கொள்முதல் விலை நீடித்தால் கேரட் பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது’ என்றார். கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories: