கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்டது 2,500 அடி உயர பிரான்மலையில் மகாதீபம்-ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சிங்கம்புணரி/சிவகங்கை : கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 2,500 அடி உயர பிரான்மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.சிங்கம்புணரி அருகே கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்ட பறம்புமலை என்னும் பிரான்மலை உள்ளது. இங்கு ஒளவையார், கபிலரால் புகழப்பெற்ற தலமான மங்கைபாகர் தேனம்மை கோயில் உள்ளது. குன்றக்குடி ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெறுகிறது.

நீலக் குறிஞ்சி, மலைத்தேன் நிறைந்த 2500 அடி உயர பிரான்மலை உச்சியில் வெற்றி விநாயகர், பாலமுருகன் சந்நிதி உள்ளது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று முதலாவதாக பாலமுருகன் திருப்பேரவை சார்பாக பாலமுருகன் சந்நிதியில் மாலை 4.20 மணிக்கு மலை தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து மலை உச்சியில் மங்கைபாகர் கோயில் மகாதீபம் முறையாளர்களால் மாலை 4.30 மணிக்கு ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மங்கைபாகர் தேனம்மை, கோயில் சந்நிதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் பனை ஓலை வைத்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மகாதீபம் ஏற்றியதை தொடர்ந்து பிரான்மலையை சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தீபத்தை பார்த்து கார்த்திகை விரதத்தை விடுவது வழக்கம். இதைத் தொடர்ந்து சிங்கம்புணரி சேதுக பெருமாள் கோயில், சித்தர் முத்து வடுகநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. மேலும் வீடுகளில் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

இதேபோல், சிவகங்கை அருகே திருமலை கிராமத்தில் சுமார் 200 அடி உயர மலையின் மீது 8ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக்கோயில், 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாகம்பிரியாள், மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாறையை குடைந்து கட்டப்பட்ட குடைவரை கோயிலின் உள்ளே சிவனும் மீனாட்சியும் திருமணக் கோலத்தில் சிலையாக உள்ளனர். மலைக்கொழுந்தீஸ்வரர் சாய்ந்த லிங்க வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளார்.

மலையின் உச்சியில் நேற்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை மலையின் மீதும் கீழ் பகுதியில் இருந்தும் ஏராளமான கிராமத்தினர் வணங்கினர். தொடர்ந்து மலையை சுற்றி 3 கி.மீ தூரம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவு 9 மணிக்கு கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: