கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலையில் தீ வைத்த மர்ம நபர்கள்-பக்தர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலை மீது மர்ம நபர்கள் வைத்த தீயால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நேற்று மாலை 6 மணியளவில் ஏற்றப்பட்டது. இத்தீபம் ஏற்றப்பட்ட மலையின் மீது தீபம் ஏற்றுபவர்கள், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், துணை ராணுவப்படையினர் தவிர அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றி முடித்த பின்னர் பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.

மலை உச்சியில் இருந்து ஏறத்தாழ 600 அடி கீழே மூன்று இடங்களில் மர்ம நபர்கள் சிலர் வைத்த தீ மளமளவென்று பரவியது. இதனால் கீழே இறங்கிக் கொண்டிருந்த பக்தர்களும், விழா தொடர்புடையவர்களும், போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது காற்றும் வேகமாக வீசி கொண்டிருந்ததால் தீயை அணைக்க பக்தர்கள் பலர் முயற்சித்தனர்.

ஆனாலும் பலனில்லாததால் மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தவர்கள் அதை சுற்றி வந்து இறங்கினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: