50 கி. மீட்டருக்கு ஒரு தொண்டரை வைத்துள்ள கட்சியெல்லாம் முதல்வரை பற்றி பேசுகிறது: திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்த கோவை செல்வராஜ், அண்மையில் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் அணியால் நீக்கப்பட்டார். கட்சிப் பணிகளில் அவர் முழுமையாக ஈடுபாடு காட்டாத காரணத்தால், பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விளக்கமளித்தது. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்.

அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். 14 வயதில் திமுகவில் என்னை இணைத்துக்கொண்டு வாக்குக்கேட்டேன், மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தில் மகிழ்ச்சி. 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை ஆதரித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதிமுக கட்சி தற்போது கம்பெனியாகி விட்டது. எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆட்சி, சுனாமியை போல் தமிழ்நாட்டில் அழிவை ஏற்படுத்திவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறது. சமூக நீதி பாதுகாவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செயல்பட வந்துள்ளேன்.

இலவச மின்சாரம் மூலம் விவசாயிகள் வாழ்வில் முதல்வர் ஒளியேற்றி வைத்துள்ளார். தமிழக மக்கள் நலன் கருதி திமுகவில் இணைந்துள்ளேன். இலவச பேருந்து பயணம் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். எந்தவித அரசியல் தலையிடும் இல்லாமல் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது. 50 கி. மீட்டருக்கு ஒரு தொண்டரை வைத்துள்ள கட்சியெல்லாம் முதல்வரை பற்றி பேசுகிறது எனவும் விமர்சனம் செய்தார்.

Related Stories: