3 வருடங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய பிரபல மோசடி மன்னன் கைது: 21 பேரிடம் ரூ.83 லட்சம் ஏமாற்றியது அம்பலம்

பெரம்பூர்: சென்னை எம்கேபி நகர் 5வது மெயின் ரோடை சேர்ந்தவர் மாரிமுத்து (57). இவர், தனக்கு அறிமுகமான சென்னை ஓட்டேரி குயப்பேட்டை சச்சிதானந்தம் தெருவை சேர்ந்த எபினேசர் (56) என்ற நபரிடம் தனக்கு தெரிந்த ஆட்களுக்கு அரசு துறையில் வேலை வாங்கித் தருவதற்காக சுமார் ₹8 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். கடந்த, 2019 ஜூன் மாதம் முதல் இந்த தொகையை செலுத்தி வந்துள்ளார். பணம் கட்டிய சில மாதங்கள் கழித்து எபினேசர் யாருக்கும் வேலை வாங்கி தராததால் மாரிமுத்து பணத்தை கேட்டுள்ளார். தொடர்ந்து, அவர்களுக்கான வேலையை வாங்கி தர முயற்சி செய்து வருவதாக எபினேசர் கூறி ஏமாற்றி வந்துள்ளார். அரசு அலுவலகங்களில் செக்யூரிட்டி பணியாட்களை வேலைக்கு அனுப்பும் சூபர்வைசர் வேலை செய்து வந்த எபினேசர், தனக்கு பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆட்களை தெரியும் என்றும், அரசியல்வாதிகளை தெரியும் எனவும் கூறி பலரை நம்ப வைத்துள்ளார்.

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி ஓட்டேரி, அயனாவரம், புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட பல இடங்களில் தனக்கு அறிமுகமானவர்களிடம் ₹1 லட்சம், 2லட்சம், 5 லட்சம் என பணத்தை வாரி குவித்துள்ளார். தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் எபினேசரிடம் வேலை வேண்டும் அல்லது வீடு வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால், கடந்த ஒரு வருடமாக தனது செல்போன் நம்பரை மாற்றிய எபினேசர், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். பல வழிகளில் போராடிய மாரிமுத்து பணம் கிடைக்காத விரத்தியில் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தன்னை போன்று பலர் ஏமாந்துள்ள தகவலை ஓட்டேரி போலீசாரிடம் தெரிவித்தார். ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூர்த்தி, வழக்கு பதிவு செய்து, எபினேசரால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரிக்க தொடங்கினார். சிலர் தங்களது பணம் கிடைத்துவிடும் என்று கூறி புகார் அளிக்க ஆரம்பத்தில் தயங்கி உள்ளனர். பின்பு, அவன் ஒரு மோசடி பேர்வழி என்பதை அறிந்த பொதுமக்கள் பலரும் தாங்கள் ஏமாந்த விஷயத்தை புகாராக ஓட்டேரி காவல் நிலையத்தில் தெரிவித்தனர்.

அதன்படி, ஓட்டேரி காவல் நிலையத்தில் மட்டும் 21 பேர் எபினேசர் மீது புகார் அளித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ₹83 லட்சம் பணத்தை எபினேசர் ஏமாற்றியது. போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, எபினேசரை கைது செய்ய ஓட்டேரி போலீசார் தீவிரம் காட்டினர். போலீசார் தேடுவதை அறிந்த எபினேசர் தொடர்ந்து தலைமுறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று ஓட்டேரி குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வேல்முருகன், சரவணன் உள்ளிட்டோர் ஓட்டேரி மேம்பாலம் அருகே சொகுசு காரில் வலம் வந்த எபினேசரை நேற்று மடக்கிப் பிடித்தனர். அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில் 2019ம் ஆண்டு முதல் 2021 வரை வேலை வாங்கித் தருவதாகவும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகவும் கூறி பலரை ஏமாற்றியதும் அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும், தன்னுடன் பழகும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான காரணங்களை கூறி ஏமாற்றி வந்துள்ளார். பெரும்பாலானவர்களிடம் தான் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை செய்வதாகவும், ஒவ்வொரு முறையும் அரசு வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியிடும்போதும் பணம் கொடுத்து ஆட்களுக்கு வேலை வாங்கித் தந்துள்ளதாக கூறி பெரும் அளவில் ஆட்களை ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரிடமிருந்து சொகுசு காரை பறிமுதல் செய்த ஓட்டேரி போலீசார் மேலும் இவரிடம் எத்தனை பேர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் ஏமாற்றிய பணத்தில் மனைவியின் பெயரில் அபார்ட்மென்ட் ஒன்று வாங்கி உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட விக்னேசர் மீது வழக்கு  பதிவு செய்த ஓட்டேரி குற்ற பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: