கிராமப்புற பெண்களுக்கும் மாதவிடாய் கப் சென்றடைய வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

தொழில்முனைவோர் இரா குஹா

மாதவிடாய்... ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய விஷயம். பெண்கள் பூப்படைந்த பிறகு அவர்கள் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் மாற்றம் தான் மாதவிடாய். தொழில்நுட்ப ரீதியாக நாம் பல மாற்றங்களை தாண்டி தினமும் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இன்றும் மாதவிடாய் குறித்தும் அதனால் பெண்களுக்கு  ஏற்படும் பிரச்னை குறித்தும் நாம் வெளிப்படையாக பேச மறுக்கிறோம். பள்ளி, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் அந்த நாட்கள் குறித்து தயக்கத்துடன் தான் இன்றும் பெண்கள் பேசுகிறார்கள். அந்த மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பெண்களுக்குள் மட்டுமே இது குறித்து ரகசியமாக பகிரப்பட்டு வருகிறது.

‘‘நகர்ப்புறங்களிலே பெண்கள் பேச தயங்கும் போது, கிராமத்தில் பெண்கள் இதனால் படும் அவஸ்தைப் பற்றி சொல்லித்தான் புரியவைக்க வேண்டும் என்றில்லை. இன்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்ச்சியும், அந்த நேரத்தில் எவ்வாறு சுகாதாரமாக பெண்கள் இருக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு குறித்து விவாதிக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இன்றைய காலத்தில் பெண்கள் ஒன்பது அல்லது பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அந்த நேரத்தில் எவ்வாறு தங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை.

நகரப் பெண்களிடம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தாலும், கிராமத்தில் இன்றும் பெண்கள் அந்த சமயத்தில் ஏற்படும் தொற்றால் அவதிப்பட்டுக் ெகாண்டு தான் இருக்கிறார்கள். இன்று சாதாரண கந்தல் துணியில் இருந்து நேப்கின்களுக்கு மாறி உள்ளனர் என்பது வரவேற்கக்கூடியது என்றாலும் அதையும் அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தாமல் பல பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். நேப்கின்களின் மாற்றாக மாதவிடாய் கப் மற்றும் டாம்பூன்கள் வந்துவிட்டன. இவையும் கிராமப்புற பெண்களுக்கு சென்றடைய வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம்’’ என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த இரா குஹா. இவர் கிராமப்புற பெண்களின் வசதிக்காகவே மாதவிடாய் கப்பினை வடிவமைத்து வழங்கி வருகிறார்.

‘‘கிராமத்தில் உள்ள பெண்கள் ேநப்கின்களுக்கு மாறினாலும் அதனால் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். இதனால் அவர்களின் பிறப்புறுப்பு பகுதியில் தடிப்பு, தொற்று ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். நான் இதனை தயாரிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்க முக்கிய காரணம் எங்க வீட்டில் வேலை பார்க்கும் அக்கா தான். ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது கொள்கை பிரிவில் முதுகலைப் பட்டம் படித்துக் கொண்டிருந்தேன். அம்மா, அப்பா எல்லாரும் பெங்களூரில் தான் இருக்காங்க. அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அந்த நேரத்தில் பள்ளி மட்டு மில்லை அலுவலகங்களுக்கும் விடுமுறை இருக்கும்.

அந்த நேரத்தில் பெங்களூருக்கு வந்திருந்தேன். எங்க வீட்டில் மேரின்னு ஒரு அக்கா தான் சமையல் செய்வார். நான் வீட்டிற்கு வந்திருந்த போது அவரில்லை. அம்மாவிடம் கேட்ட போது, உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க. நான்கு நாள் கழிச்சு அக்கா வந்த போது, உடல் நிலை குறித்து விசாரித்தேன். அப்போது அவங்க மாசா மாசம் வரும் இந்த மாதவிடாய் பிரச்னை தான். அந்த நேரத்தில் நேப்கின் பயன்படுத்துவதால், அரிப்பு மற்றும் சருமத்தில் தடிப்பு ஏற்படுகிறது என்றார். ஒவ்வொரு மாசமும் இது பெரிய வலி நிறைந்த சுழற்சியாவே இருக்குன்னு வருத்தப்பட்டார்.

அமெரிக்காவில் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் கப்பிற்கு மாறிட்டாங்க. நானும் தான். அங்கு படிக்க சென்ற நாள் முதல் நான் அதைத்தான் பயன்படுத்தி வருகிறேன். இந்தியா வந்தாலும் நேப்கின் எல்லாம் நான் பயன்படுத்த மாட்ேடன். அதனால் என்னிடம் ஒரு கப் எக்ஸ்ட்ராவா இருந்தது. அதை மேரி அக்காவிடம் கொடுத்து பயன்படுத்திப் பார்க்க சொன்னேன். அவரும் பயன்படுத்திவிட்டு சரும தடிப்பு, அரிப்பு மற்றும் சிறுநீர் தொற்று பிரச்னை இல்லை என்றும் பயன்படுத்துவதும் எளிதாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவருடைய சகோதரிக்கும் ஒன்று வேண்டும் என்ற கேட்டு வாங்கிக் கொண்டார். இவரைப்போல் எத்தனை பெண்கள் வீட்டு வேலைக்கு செல்வார்கள்.

அவர்களில் பலரும் இது போன்ற பிரச்னையை அனுபவித்து வருவார்கள் என்று யோசிக்க ஆரம்பிச்சேன். அதனால் எங்க ஏரியாவில் வீட்டு வேலைப் பார்க்கும் பெண்களை மேரி அக்கா மூலம் விவரம் பெற்று அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தேன்’’ என்று கூறும் இரா ஒவ்வொரு முறை அமெரிக்காவில் இருந்து வரும் போது மாதவிடாய் கப்பினை வாங்கி வந்து இங்குள்ள வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

‘‘எனக்கு சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவது விருப்பம். அதனால் தான் பொதுக் கொள்கை துறையை தேர்வு செய்து படிச்சேன். மாதவிடாய் குறித்து பெண்கள் சந்திக்கும் பிரச்னையை பற்றி கேள்விப்பட்ட நாள் முதல் எனக்கு அவர்களுக்கு இது குறித்த சேவையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அந்த எண்ணம் தான் மாதவிடாய் கப்பினை தயாரிக்கும் எண்ணத்தை தூண்டியது.

இது குறித்து பல ஆய்வுகள் மற்றும் இதனை பயன்படுத்துவதால் என்ன சிக்கல்களை பெண்கள் சந்திக்கிறார்கள் குறித்து ஆய்வு எடுத்தேன். அதில் கப்பினை பயன்படுத்தினாலும், ரத்தப்போக்கு வெளியில் கசிவதாகவும், கப்பை அகற்றுவது கடினமாக இருப்பதாகவும் சர்வேயில் தெரிய வந்தது. இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உருவானது தான் ‘ரிமூவல் ரிங்’ இணைக்கப்பட்டு ஆசான் மென்சுரல் கப் என்ற பெயரில் இந்த நிறுவனத்தை துவங்கினேன்.

நான் அமெரிக்காவில் இருந்தாலும், இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. அதனால் இங்கு உள்நாட்டு சந்தை குறித்து நன்கு தெரிந்த ஆலோசகர் அனுராதா மகாதேவன் உடன் இணைந்து செயல்பட ஆரம்பிச்சேன்’’ என்றவர் ஆசான் மாதவிடாய் கப்பினை ஹார்வர்ட் இன்னொவேஷன் ஆய்வு கூடத்தில் பல கட்டமாக தயாரித்து சோதனை செய்து அங்குள்ள ஆய்வாளர்களை கொண்டு வடிவமைத்துள்ளார்.

‘‘இந்த கப்பினை மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் கொண்டு தயாரிக்கிறோம். கப்பை அகற்ற அதன் அடியில் பிரத்யேக ரிங் போன்ற அமைப்பு  பொருத்தப்பட்டுள்ளது. மற்ற மாதவிடாய் கப்பினை விட இதனை பயன்படுத்துவது எளிது. இந்த கப்களை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்’’ என்றவர் ஒன்று  வாங்கினால் ஒன்றை நன்கொடையாக வழங்கலாம் என்ற திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களுக்கு இந்த கப்பினை அளித்து வருகிறார்.

‘‘கிராமத்தில் வாழும் பலர் இன்றும் நேப்கின் வாங்க கூட வசதி இல்லாமல் தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்களால் இது போன்ற தயாரிப்புகளுக்கு செலவிட முடியாது. இவர்களுக்கும் இது பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த திட்டத்தினை ஆரம்பித்தோம். அதாவது நீங்கள் எங்களிடம் இந்த கப்பில் ஒன்றை வாங்கினால், மற்றொரு கப் கிராமப்புற பெண்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும். முதல் கட்டமாக பெங்களூரின் புறநகரான கனகபுரா பகுதியில் உள்ள கிராமங்களில் பெண்களின் ஆரோக்கியம் குறித்து பல என்.ஜி.ஓக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தோம்.

எங்களின் முதல் கட்ட முயற்சியாக முதலில் 10 சுகாதார பணியாளர்களுக்கு இந்த கப்பினை வழங்கினோம். பயன்படுத்தியவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறினார்கள். இவர்களைக் கொண்டு கிராமப்புற பெண்கள் மத்தியில் இந்த கப்பினை பயன்படுத்தும் முறை மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினோம். மாதவிடாய் கப்பினை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது எங்களின் நோக்கமில்லை. பெண்களின் ஆரோக்கியம் குறித்த சரியான தகவல்கள் அவர்களை சென்றடைய வேண்டும்” என்று கூறும் இரா தனக்கு கிடைத்த ஃபெல்லோஷிப் உதவித்தொகையினை இது குறித்த ஆரம்பகட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தியுள்ளார்.

தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாகவும் கிராமப்புற மக்களுக்கு உதவி செய்ய திட்டமிட்டு இருக்கும் இரா, மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினார்.‘‘மாதவிடாய் நாட்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் மிகவும் அவசியம். இப்போது நேப்கின், டேம்பூன், மென்சுரல் கப் என பல பொருட்கள் மாதவிடாய் காலத்தில் பயன்பாட்டில் இருந்தாலும், அதை தரமானதாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் 3 அல்லது 4 மணி நேரத்துக்கு ஒரு முறை நேப்கின் மாற்றுவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை மாற்றும் போதும் சுத்தமான நீரால் பெண் உறுப்பை கழுவிய பிறகு நேப்கினை மாற்ற வேண்டும். மென்சுரல் கப் பயன்படுத்தினால் உரிய இடைவெளியில் அதை அகற்றி சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார் இரா குஹா.

தொகுப்பு: ஷன்மதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: