குழந்தைகளுக்கும் வந்தாச்சு மூலிகை அழகு சாதனப் பொருட்கள்!

நன்றி குங்குமம் தோழி

இன்று குழந்தைகள் தாமாகவே லிப்ஸ்டிக்கும் கண்மையும் இடத் தொடங்கிவிட்டனர். பல குழந்தைகள் டான்ஸ், இசை, நாடகம் எனச் சிறு வயதிலேயே மேடைகள் ஏறுவதால் அதற்கு ஏற்றது போல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை விதவிதமாக அலங்கரித்து அழகு பார்க்கின்றனர். இது ஒரு புறம் வரவேற்கத்தக்கது என்றாலுமே, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்த காஸ்மெடிக்ஸ் மற்றும் அழகு சாதனப் பொருட்களை குழந்தைகள் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு நல்லதல்ல.

அதே சமயம், குழந்தைகள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று மொத்தமாக இன்று அதை தடுக்கவும் முடியாது. பள்ளி விழாக்களுக்கு, போட்டிகளுக்கு எனக் குழந்தைகள் தாங்களே விரும்பி அலங்காரங்கள் செய்ய ஆசைப்படுகின்றனர். இந்த சிக்கலை போக்க சென்னையைச் சேர்ந்த லில்லி இயற்கைச் சார்ந்த மூலிகை அழகு சாதனப் பொருட்களை குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும் தயாரித்து வருகிறார்.   

லில்லி, இயற்கை மற்றும் ஆர்கானிக் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் காஸ்மெடிக்ஸ் ஃபார்முலேட்டராக இருக்கிறார். இவர் பிறந்த குழந்தைகளில் தொடங்கி சிறுவர்கள், பெரியவர்கள் என மூன்று விதமான சருமத்தை கொண்டவர்களுக்கும் அழகு சாதனப் பொருட்களை லக்‌ஷதிகா ஹெர்பல்ஸ் (Lakshadhika Herbals) என்ற பெயரில் உருவாக்கி வருகிறார். ‘‘திருமணமாகி குழந்தை பிறந்ததும், ரசாயனம் கலக்காத பொருட்களை குழந்தைக்கு கொடுக்க விரும்பினேன்.

இயற்கை சார்ந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வந்தேன். ஆனால் அப்போது குழந்தைக்கு ஏற்ற சோப், க்ரீம் போன்ற பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை. பெரியவர்களுக்கான ஆர்கானிக் பொருட்கள் மட்டுமே மார்க்கெட்டில் கிடைத்தது. இதனால் ஹெர்பல் சோப் தயாரிக்கும் வகுப்பில் இணைந்து, என் குழந்தைக்கு நானே பாதுகாப்பான சோப் தயாரிக்க ஆரம்பித்தேன். அதை அப்படியே எனக்கு தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுத்து வந்தேன். பெற்றோர்கள் இதை விரும்பி காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தனர். பல ஆர்டர்களும் தொடர்ந்து வரவே ஆர்கானிக் சோப் தயாரிப்பில் முழுவதுமாக இறங்கி லக்‌ஷதிகா ஹெர்பல்ஸை 2018ல் ஆரம்பித்தேன்.

அதன் பிறகு ெஹர்பல் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் டிப்ளமோ வகுப்பில் இணைந்து, வாடிக்கையாளர்கள் அளித்த ஆதரவில் சோப் மட்டுமில்லாமல் ஷாம்பூ, ஹேர் ஆயில், சீரம், முகத்திற்கான க்ரீம், ஜெல், டோனர், கை-கால்களுக்கான க்ரீம், பாடி வாஷ், லிப்-பாம், லிப்ஸ்டிக், கண்மை போன்ற பொருட்களையும் தயாரித்தேன்” என்கிறார். குழந்தைகளுக்கு காஜல், குங்குமாதி தைலம், அல்பமாதி தைலங்களை சருமத்திற்கு ஏற்றது போல இவர் கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறார். ‘‘என்னிடம் பிறந்து சில வாரங்களே ஆன குழந்தைகளுக்கான சோப்பும், ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சோப் மற்றும் பெரியவர்களுக்கான சோப் என தனித்தனியான வகைகள் இருக்கிறது. பிறந்த குழந்தையின் சருமமும், வளர்ந்தவர்களின் சருமமும் ஒரே மாதிரி இருக்காது. எனவே குழந்தைகளுக்கென கொஞ்சம் மென்மையான சோப்புகளைப் பயன்படுத்துவதே நல்லது.

பிறந்த குழந்தைக்கு கரிசலாங்கண்ணி காஜல் உருவாக்கியுள்ளேன். சில சமயம் குழந்தைகள் கண்மை பயன்படுத்தும் போது கண் எரிச்சல் இருப்பதாக கூறுவார்கள். ஆனால் இந்த ஹெர்பல் கண்மையில் கேஸ்டர் ஆயில், ஆல்மண்ட் ஆயில் பயன்படுத்தி கண்ணிற்கு குளிர்ச்சி தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காஜல் நீள நிறத்திலும் கிடைக்கும். லிப்ஸ்டிக் பொறுத்தவரை சிலிகான், பேரபென் போன்ற நச்சுப் பொருள் கலந்த வகைகள் தான் சந்தைகளில் அதிகம் விற்பனை ஆகும். ஆனால் நான் எந்த நச்சுப்பொருளும் சேர்க்காத பதனச்சரக்குகள் கலக்காத எட்டு மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்தக்கூடிய லிப்ஸ்டிக் பொருட்களை தயாரிக்கிறேன். முதலில், என் குழந்தைக்கு சிலிக்கான் சேர்க்காத ஆரோக்கியமான லிப்ஸ்டிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக பல ஃபார்முலாக்களை முயற்சி செய்த பின்னரே இதை உருவாக்கியுள்ளேன்.

என்னிடம் மூன்று வயது முதல், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் லிப்ஸ்டிக் வாங்குகிறார்கள். இந்த லிப்ஸ்டிக்கையே ஐ-ஷேடோவாகவும், முகத்திற்கு பொலிவுத்தரவும் பயன்படுத்திக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு எப்போதுமே ஃப்ரெஷ்ஷாகத்தான் பொருட்கள் தயாரிப்பேன். பொதுவாக குழந்தைகள் உதட்டில் தடவிய லிப்ஸ்டிக்கை சாப்பிட்டுவிடுவார்கள். அப்போது அது சாதாரண லிப்ஸ்டிக்காக இருந்தால், அதிலிருக்கும் நச்சுப்பொருட்களும் உடலுக்குள் செல்லும்.

ஆனால் நான் தயாரிக்கும் லிப்ஸ்டிக்கை குழந்தைகள் தெரியாமல் சாப்பிட்டாலும் அது உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. இதற்கு இயற்கையான கலர் சேர்க்கிறேன். மேலும், குழந்தைக்கு லிப்ஸ்டிக் தடவிய பின், சாப்பாடு கொடுப்பதற்கு முன் அந்த லிப்ஸ்டிக்கை ஒரு டிஷ்யூ பேப்பரில் நீக்கியப் பின் உணவளியுங்கள் எனப் பெற்றோர்களுக்கு அறிவுறுத்துவோம்.

குழந்தைகளுக்கு ஆலிவ் ஆயில், நெய் மற்றும் வெண்ணெய் சேர்த்த சோப் தயாரிக்கிறோம். அதே போல குழந்தைகளுக்கென ஸ்பெஷலாக பேபி பாடி க்ரீம், பேபி பாடி வாஷ், பேபி ஷாம்பூ, பேபி காஜல், கிட்ஸ் காஜல், கிட்ஸ் சோப், வெட்டிவேர், ஆவாரம்பூ - ஷாம்பூ போன்ற அனைத்து பொருட்களும் எங்களிடம் கிடைக்கும்.இது தவிர பெரியவர்களுக்கென முகப்பருக்களைப் போக்கும் க்லென்சர், டோனர் மற்றும் மாய்ஸ்சரைசர் கொண்ட கிட்டும் உள்ளது. இதை பெண்கள் மிகவும் விரும்பி வாங்குகிறார்கள். ரைஸ் ப்ரோட்டீன் ஷேம்பூ வாடிக்கையாளர்கள் மத்தியில் ரொம்ப ஃபேமஸ். ஒரு வாரத்திற்கு மட்டும் பத்து கிலோ தயாரிப்பேன். இது ஆரோக்கியமான நீண்ட முடி வளர உதவும். தேங்காயுடன் அடிப்படையிலான பொருட்களை சேர்த்து, நுரை வருவதற்காக பயன்படுத்துகிறோம்.  

சில வாடிக்கையாளர்கள், தங்களுக்கு கற்றாழை வேண்டாம் அது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பார்கள். அவர்களுக்கென அந்த பொருளை நீக்கி அல்லது அதற்கு பதிலாக வேறு பொருள் கலந்த காஸ்மெட்டிக்ஸை தயார் செய்து கொடுக்கிறேன். ஒவ்வொரு பொருளும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிப்பதால், ஆர்டர் வந்த பிறகு தான் அதனை தயாரிக்கவே ஆரம்பிப்பேன்’’ என்கிறார் லில்லி.

பொதுவாக மேக்கப் பொருட்களில், பல நச்சுப் பொருட்கள் சேர்க்கப்படும். இவை புற்றுநோயில் தொடங்கி பல தீங்குகளை விளைவிக்கும். ஆனால் லில்லி தயாரிக்கும் ஹெர்பெல் மேக்கப்பில் எந்த வித ரசாயனப் பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்த பின்னரே அந்த பொருளைக் குறைந்த அளவில் தயாரித்து கொடுக்கிறார். கஸ்தூரிமஞ்சள், வெட்டிவேர், ரோஜா இதழ்கள், வெள்ளை மஞ்சள், ஆவாரம்பூ மற்றும் கார்போக அரிசி போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் நலங்குமாவு சோப், சருமத்தில் ஏற்படும் பருக்களையும், சருமத்தில் எண்ணெய் கசிவையும் குணப்படுத்தும்.

கேரட் எப்போதுமே சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். ஆவாரம்பூ வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கும். கேரட்+ஆவாரம்பூ சோப்பை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது மிகவும் ஏற்றது. இது போல முப்பதுக்கும் அதிகமான இயற்கை சோப் வகைகளை லில்லி தயாரித்து வருகிறார். மேலும் தலை முதல் கால் வரை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து அழகு சாதனம் மற்றும் சரும பாதுகாப்பு பொருட்களை இந்தியா முழுக்க விற்பனை செய்து வருகிறார்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: