கடல் கடந்து செல்லும் திருச்சி மரச்சிற்பம்; கலைநயமிக்க சிற்ப தொழிலை நம்பி ஒரு கிராமம்: வெளிநாட்டினர் வியக்கும் வண்ணம்

உலகிலேயே இந்தியாவில் தான் கலைகள் பிறந்ததாக கூறுவார்கள். குறிப்பாக சிற்பக்கலைகளின் பிறப்பிடமாக நமது நாட்டில் அதிலும் குறிப்பாக தமிழகம் விளங்கி வருகிறது. தமிழனின் கலைத்திறன்மிக்க படைப்புகள் அனைத்தையும் உலகமே கொண்டாடி வருகிறது. கட்டிடக்கலை, சிற்பக்கலை, கைவினை பொருட்கள் என பல்வேறு படைப்புகளிலும் தமிழனின் பெருமை இன்றளவும் தனிப்பெருமை அடையாளமாக விளங்கி வருகிறது. இந்த உலகில் கலை நயத்திற்கு என்று எப்போதுமே ஒரு தனி இடமுண்டு. அந்த கலை நயத்தினை அங்கீகாித்தாலும், அதன் வேலைபாடுகளுக்கு வௌிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது...

திருச்சி, சேலம் மாவட்டத்திற்கும் நடுவில் எல்லையாக அமைந்துள்ளது தம்மம்பட்டி. சேலம் மாவட்டத்திற்குட்பட்ட காந்திநகர் என்ற ஒரு பகுதியில் இருந்து அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் அளவிற்கு தம்மம்பட்டி மரச்சிற்பம் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இது ஏதோ வயிற்று பிழைப்புக்காக என்பதை தாண்டி இந்த தொழிலை நம்பி ஒரு சிறு கிராமமே உள்ளது. இதுகுறித்து மரச்சிற்பம் செய்துவரும் ஸ்ரீனிவாசன் தெரிவித்ததாவது: 1942ம் ஆண்டு தாத்தா ராமசாமி, தனது தந்தை சந்திரனுடன் தம்மம்பட்டி கிராமத்தில் உள்ள உக்கிர கதளி லட்சுமி நரசிம்மன் திருகோவில் தேரை வடிவமைக்க வந்தவர்கள்.

பின்னர் அவர்கள் அங்கேயே தங்கி தங்களுடைய திருப்பணியை செய்துள்ளனர். அதன்பின் தந்தை ராமசாமி தேர்சிலைகளில் இருந்து எல்லா சிலைகளையும் தனித்தனியாக மரத்தில் சிலைகளாக வடிவமைத்தார். அன்றைய காலக்கட்டத்தில், அவர் செய்யும் மரச்சிலைகளை சென்னையில் வடமாநிலங்களை சேர்ந்தவர்களிடம் விற்பனை செய்வோம். அவர்கள் வௌிநாடுகளுக்கு கப்பல்களில் அனுப்பி வைப்பார்கள். 1978ல் மத்திய அரசு சார்பில் டெல்லியில் ஆல் இந்தியா கலை கண்காட்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தனது தந்தை, தலைசிறந்த சிற்பி என்ற பட்டம் வாங்கினார்.

1981ல் ரிஷிகேசில் உள்ள சிவானந்த ஆசிரமத்தின் நுழைவாயில் கதவை தனது தந்தை வடிவமைத்தார். 1982ல் இந்த மரச்சிற்பங்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அவருடைய நுணுக்கங்களை நான் கற்றுக்கொண்டு தற்போது இந்த மரச்சிற்பங்களை கலை நயத்துடன் உருவாக்கி வருகிறேன். உள்ளுரில் தமிழகத்திற்குள், இந்தியாவிற்குள் மாவலிங்கம், அத்திமரம் இரண்டையும் பயன்படுத்தி சிற்பங்கள் செய்து கொடுப்போம். விநாயகர், லட்சுமி, சரஸ்வதி போன்ற தெய்வங்களின் சிலைகளும் செய்து அனுப்பி வருகிறோம். நமக்கு தான் அவை தெய்வங்கள். வௌிநாட்டவர்களுக்கு அது ஒரு கலைப்பொருள்.

அவர்கள் அதை கலையாகதான் பார்ப்பார்கள். கடந்த 1992ல் மும்பையில் நடைபெற்ற கண்காட்சியில் எங்களுடைய மரச்சிற்பங்களை அங்கு காட்சி படுத்தினோம். அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரே ஒருமுறை மட்டும் தான் ஜப்பானுக்கு இந்த சிற்பங்கள் ஏற்றுமதி செய்தோம். அதன்பின் மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. எந்த நாட்டிற்கு செல்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் சிற்பங்கள் தயார் செய்து அனுப்புவோம். இதில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. அவர்கள் பழமை மாறாத சிற்பங்களை விரும்புபவர்கள்.

அவர்களுக்கு என்று ஒரு கைவண்ணம் உண்டு. இந்த கலை நயத்தை பாராட்டி தம்மம்பட்டி கிராமம் இதுவரை சிறந்த கலைக்காக தமிழக அரசால் 7 விருதுகள் வாங்கியுள்ளது. மாவட்ட அளவில் 30 விருதுகள் , மாநில அளவில் 1 விருது, வாழும் பொக்கிஷம் என்று 3 விருதுகள் பெறப்பட்டுள்ளது. உலக நாடுகளிலும், நமது நாட்டிலும் போற்றி கொண்டாடப்படும் கலையாக இன்றளவும் சிற்பக்கலை விளங்கி வருகிறது என்றால் மிகையாகாது.

இந்த கலை நயத்தை பாராட்டி தம்மம்பட்டி கிராமம், இதுவரை சிறந்த கலைக்காக தமிழக அரசால் 7 விருதுகள் வாங்கியுள்ளது. மாவட்ட அளவில் 30 விருதுகள், மாநில அளவில் 1 விருது, வாழும் பொக்கிஷம் என்று 3 விருதுகள் பெறப்பட்டுள்ளது.

Related Stories: