கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திருப்போரூர்: சென்னையை அடுத்த படூரில் இருந்து தையூர் வரை ஓஎம்ஆர் சாலையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புறவழிச்சாலையை ஒட்டி உள்ள நீர்நிலைப்பகுதியான ஏரித்தாங்கலை ஆக்கிரமித்து மதிற்சுவர் மற்றும் கட்டுமானங்கள் எழுப்பி இருப்பதாக ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இதில், திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவற்றை அகற்றி உாிய ஆவணங்களை வருகிற 18ம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதையடுத்து நேற்று மாலை திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவி தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா, மேலாளர் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 30 ெசன்ட் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிக்கப்பட்டு மதிற்சுவர் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தனியார் கல்லூரி மற்றும் தனி நபர்கள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த மதிற்சுவர்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீட்கப்பட்ட சுமார் 29 சென்ட் நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 3 கோடி  இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்றும் (அதாவது புதன்கிழமை) படூரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: