இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்

சென்னை: நாட்டுப்புற கலைகளை இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டும், அதனை வளர்க்க வேண்டும்  அதோடு மட்டுமில்லாமல் மேல்நாடுகளுக்கும் சென்று கலையினை வளர்க்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையம் மூலம் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மெட்ரோ பயணிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமான கண்டு களித்தனர். இந்த கலை நிகழ்ச்சியை மதுரை கலைமாமணி சோமசுந்தரம் குழுவைச் சேர்ந்த 20 பேர் கொண்ட நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளை ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து  சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கூறியதாவது: நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நகர்ப்புற மக்களும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மூலம் வருங்கால சந்ததியினர் நாட்டுப்புறக் கலைகளை அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் தங்களை தனித்துவம் வாய்ந்த பல்வேறு திறமைகளை இந்நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் கிராமிய கலை மேலும் வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியை கண்டு களிக்கும் இந்த இளைஞர்கள் வருங்கால சந்ததியினர் நாட்டுப்புறக் கலைகளை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். நாட்டுப்புற கலைகள் பற்றி தெரிந்து கொண்டால் அதனை கற்றுக் கொள்ள ஆர்வம் வரும். இயல், இசை, நாடகம் பற்றி கற்றுக்கொள்ள பள்ளி கல்லூரிகளும் உள்ளன. நாட்டுப்புற கலைகளை இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டும், அதனை வளர்க்க வேண்டும் அதோடு மட்டுமில்லாமல் மேல்நாடுகளுக்கும் சென்று கலையினை வளர்க்க வேண்டும். இந்நிகழ்ச்சியை நடத்திய கலைஞர்கள் பணி புரிபவர்களாகவும் பட்டதாரிகளாகவும் இருக்கிறார்கள், இவர்கள் மேல் நாடுகளுக்கு சென்று கலை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இவர்களை பாராட்டி கௌரவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறினார்.

Related Stories: