சர்வதீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும்; பக்தர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான சர்வதீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 3வது வார்டு பகுதியில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாததால் அசுத்தம் அடைந்து துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இக்குளத்தில் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உற்சவ பிரமோற்சவத்தின் நிறைவு நாளில் தீர்த்தவாரி நடைபெறும். குளத்தைச் சுற்றி கங்காதீஸ்வரர், அனுமந்தீஸ்வரர், யோகலிங்கேஸ்வரர், ராமேஸ்வரர், சீத்தேஸ்வரர், லட்சுமனேஸ்வரர், மல்லிகா அர்ஜூனீஸ்வரர், தீர்த்தீஸ்வரர், இரன்னீஸ்வரர், காமேஸ்வரர், காசிவிஸ்வநாதர், தவனேஸ்வரர் ஆகிய சிவன் சன்னதிகள் உள்ளன.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சர்வ தீர்த்த குளம் முறையாக பரமரிக்கப்படாததால் மரம், செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும், குளத்தில் கழிவுநீர் கலந்து, பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் அசுத்தமாக உள்ளது. காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கழிவுநீர் சர்வதீர்த்தக் குளத்தில் விடப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பக்தர்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். இதனால், குளத்தில் நீராடும் பக்தர்கள், முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்களுக்கு தோல் சம்பந்தமான நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் சர்வதீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: