காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி; கலெக்டர், எஸ்.பி தொடங்கி வைத்தனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து இருசக்கர வாகன பேரணி நேற்று நடைபெற்றது.

இதனை, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட எஸ்பி சுதாகர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போதைப் பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தமிழக முதல்வர் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவுரை வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், போதைப் பொருட்கள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி, மேட்டுத்தெரு, மூங்கில் மண்டபம், பஸ் நிலையம், ராஜ வீதி வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது.

பேரணியில், போதைப்பொருள் ஒழிப்பு பயன்பாட்டினை தவிர்த்தல், விற்பனையை தடுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த பேரணியில், சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். இப்பேரணி குறித்து, மாவட்ட போலீஸ் எஸ்பி.சுதாகர் கூறுகையில், ‘தமிழக அரசு வழிகாட்டுதலின்பேரில் காவல் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் இல்லா காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்குவது நமது குறிக்கோளாக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’என்றார்.

Related Stories: