கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்

பள்ளிப்பட்டு: திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று திரும்பியபோது மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்தில் அவருடன் சென்ற குடும்பத்தினர் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பங்காருபாளையம் அருகே வெங்கடாத்திரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் ஆச்சார்யா(50), இவரது மனைவி மாதவி(45), இவர்களது மகன் ரவி தேஜா(22), மகள் யாமினி(23) மற்றும் உறவினர்கள் வாணி(80), பிரியா(23) ஆகியோர் காரில் நேற்று முன்தினம் தங்களது சொந்த ஊரிலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

தொடர்ந்து திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அன்று இரவு 6 பேரும் காரில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காரை ஜெகதீஷ் ஆச்சார்யா ஓட்டிச்சென்றார். இந்நிலையில், சோளிங்கர் - சித்தூர் மாநில நெடுஞ்சாலை தாமரைக்குளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரவி தேஜா சிகிச்சை பெற்றதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ரவி தேஜா பரிதாபமாக பலியானார். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பலியான ரவி தேஜா ஐதராபாத்தில் தெலுங்கு குறும்படங்களை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: