பெரியபாளையம் அருகே காட்டிலிருந்து வழி தவறி வந்த புள்ளி மான் மீட்பு

பெரியபாளையம்: வடமதுரை காப்புக்காட்டிலிருந்து வழிதவறி வந்து, தனியார் திருமண மண்டபத்தில் பதுங்கியிருந்த புள்ளிமான் பத்திரமாக மீட்கப்பட்டது.

பெரியபாளையம் அடுத்த வடமதுரை காப்பு காட்டில் மான்கள், முயல்கள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளும், மயில்கள் உள்பட பல பறவையினங்களும் உள்ளன. இங்குள்ள விலங்குகள், பறவகைள் அடிக்கடி ஊருக்கு வந்துவிடுவது உண்டு. அவற்றை வனத்துறையினர் மீட்டு மீண்டும் காப்புக்காட்டில் விட்டுவிடுவது வழக்கம். இந்நிலையில், பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் சமையல் அறையில் ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை சுத்தம் செய்ய வந்தபோது, அங்கு ஒரு புள்ளிமான் பதுங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவற்றை கண்டு ஊழியர்கள் பயந்து வெளியே ஓடிவந்துவிட்டனர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு பதுங்கியிருந்த புள்ளிமானை பத்திரமாக மீட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் வெங்கல் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த புள்ளிமானை பெற்றுகொண்டனர். இதனிடையே, புள்ளிமானை வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், `வடமதுரை காப்புக்காட்டிலிருந்து புள்ளிமான் வழிதவறி வந்திருக்கலாம். இந்த மானை மீண்டும் காட்டில் விட்டுவிடுவோம்’என கூறினர்.

Related Stories: