தமிழக-கேரள எல்லையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்து உயிருக்கு போராடும் ஒற்றை யானை: கும்கி உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு

கோவை: தமிழக, கேரளா எல்லையான ஆனைகட்டி அருகே கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் வாயில் காயத்துடன் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் சுற்றித்திரியும் ஆண் யானைக்கு கும்கிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம், ஆனைகட்டி வடக்கு பீட், சீங்குளி பழங்குடியின கிராமம் அருகே கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப்பகுதியில் ஆண் யானை ஒன்று நேற்று முன்தினம் காலையில் தென்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையை கண்காணித்தனர்.

யானை ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நின்றது. தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலையில் அவதிப்பட்டுள்ளது. யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக ஊழியர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த ஊழியர்கள் குழுவாக யானை கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் கேரளா புதூர், தாசனூர் மேடு பகுதிக்கு யானை சென்றது. இது கேரளாவில் உள்ள அட்டப்பாடி சரகத்தின் கீழ் உள்ளது.

இதையடுத்து, கேரள வன அலுவலர்களுடன் சேர்ந்து டிரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கோவை மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ஆகியோருடன், பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகளை வரவழைத்து அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: