இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது சீன உளவு கப்பல்: 22ம் தேதி வரை முகாமிடும் என அறிவிப்பு

கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, இலங்கையில் உள்ள அம்பன்தொட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’ நேற்று காலை வந்து சேர்ந்தது. சீனாவை சேர்ந்த உளவு கப்பலான, ‘யுவான் வாங்-5’, விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கண்டறியும் திறன் கொண்டது. சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கப்பல், எதிரி நாடுகளை உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

கடலில் இது பயணிக்கும் போது, அதன் அருகில் உள்ள நாடுகளின்  ஏவுகணை தளங்கள்,  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், அணுமின் நிலையங்கள், ராணுவம் தொடர்புடைய தளங்கள், ஆராய்ச்சி அமைப்புகளின் இருப்பிடங்களை மோப்பம் பிடித்து விடும். ஆனால், இதை ஒரு சாதாரண ஆய்வு கப்பல் என்றே சீனா கூறி வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த கப்பலை, தனது நாட்டில் உள்ள அம்பன்தொட்டா துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி  முதல் 17ம் தேதி வரையில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்தது. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிகமாக இதன் வருகையை ஒத்திவைக்கும்படி சீனாவை இலங்கை அரசு கோரியது. ஆனால், அதை நிராகரித்த சீன அரசு, இலங்கையை நோக்கி கப்பலை அனுப்பியது.

இலங்கைக்கான சீன தூதர் நிர்ப்பந்தம் செய்ததை தொடர்ந்து, அம்பன்தொட்டாவுக்கு யுவான் வாங்-5 கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்தது. சில தினங்களுக்கு முன்பே இக்கப்பல் தனது கடல் எல்லைக்குள் வந்து விட்ட போதிலும், அம்பன்தொட்டாவுக்கு அது வருவதற்கான அனுமதியை இலங்கை அரசு தாமதப்படுத்தியது. இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு அதற்கான அனுமதியை வழங்கியது. இதைத் தொடர்ந்து, இலங்கையில்  இருந்து 600 நாட்டிகல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த சீன கப்பல், அம்பன்தொட்டா  துறைமுகத்துக்கு  நேற்று காலை 8.20க்கு வந்து சேர்ந்தது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது வரும் 22ம் தேதி வரையில் 7 நாட்களுக்கு இங்கு முகாமிட உள்ளது.

அதே நேரம், இக்கப்பலில் உள்ள வீரர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், உணவு பொருட்கள், எரிபொருள் போன்றவற்றை நிரப்புவதற்காக மட்டுமே இது வந்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.

யுவான் வாங் -5

* இந்த கப்பல் 733 அடி நீளமும், 86 அடி அகலமும் கொண்டது.

* இதன் மொத்த எடை 11 ஆயிரம் டன்.

* அதிக பாரத்தை சுமக்கும் வல்லமை பெற்றது.

* பெரிய ராக்கெட்டுகளையும் ஏவும் வசதி கொண்டது.

* இக்கப்பல் சேகரிக்கும் உளவுத்  தகவல்கள், சீனாவில் உள்ள  ராணுவ புலனாய்வு அமைப்புக்கு அடுத்த நொடியே சென்று விடும்.

சீன தூதர் நக்கல் பதில்

இலங்கைக்கான சீன தூதர் கியூ சென்ஹாங் கூறுகையில், ‘கடந்த 2014ம் ஆண்டும் இதுபோன்ற ஆய்வு கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது. எனவே, யுவான் வாங்-5-ன் வருகை மிக சாதாரணமானது தான். இதன் வருகையால் இந்தியா அடைந்துள்ள கவலை பற்றி, அந்த நாட்டிடம்தான் கேட்க வேண்டும்,’ என தெரிவித்தார்.

* கடந்த 2014ம் ஆண்டு அம்பன்தொட்டா துறைமுகத்துக்கு சீனாவின் அணு நீர்மூழ்கி கப்பல் வந்தது. இதன் காரணமாக, இந்தியா- இலங்கை உறவு பாதித்தது.

பிரச்னைகள் தீர்ந்து விட்டது

சீன வெளியுறவு அமைச்சக  தகவல் தொடர்பாளர் பந்துலா குணவர்த்தனே கூறுகையில், ‘யுவான் வாங்-5 கப்பலின் வருகை தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் சுமுக தீர்வு காணப்பட்டு விட்டது. எல்லா நாடுகள் உடனும் நல்லுறவு வைத்திருப்பது எங்களுக்கு முக்கியமானது,’ என தெரிவித்தார்.

கப்பலை வரவேற்ற இலங்கை எம்பி.க்கள்

யுவான் வாங்-5 உளவு கப்பல் அம்பன்தொட்டா துறைமுகத்துக்கு வந்தபோது  இலங்கைக்கான சீன தூதர் கியூ சென்ஹாங்,  லங்கா பொதுஜன பெருமுனா கட்சியை  சேர்ந்த எம்பி.க்கள் அதை வரவேற்றனர். ஆனால், கப்பலுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்திய உளவுத் துறை, ராணுவம் உஷார்நிலை

யுவான் வாங்-5 கப்பலின் ஒவ்வொரு அசைவையும் இந்திய  உளவுத்துறைகளும், ராணுவமும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. மேலும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற தென்மாநிலங்களில் உள்ள ராணுவ தொடர்புடைய அமைப்புகளை இந்த உளவு கப்பல் உளவு பார்ப்பதை  தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன.

Related Stories: