சில்லி பாய்ன்ட்...

* தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இன்னும் முழுமையாகக் குணமடையாததால், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆல் ரவுண்டர் ஷாபாஸ் அகமது (27 வயது) இந்திய அணியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

* இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கான 3 ஆண்டு கால அட்டவணையை (மே 2022 - ஏப்ரல் 2025) ஐசிசி நேற்று அறிவித்தது. இந்த காலகட்டத்தில் இந்திய மகளிர் அணி 4 டெஸ்ட், 27 ஒருநாள் மற்றும் 36 டி20 என மொத்தம் 67 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. அட்டவணை மே 2022ல் இருந்து தொடங்குவதால், இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு எதிராக விளையாடிய 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளும் இதில் கணக்கில் கொள்ளப்படும்.

* இந்திய ஒலிம்பிக் சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 3 நபர் குழுவை உடனடியாக நியமிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* அயர்லாந்து ஆல் ரவுண்டர் கெவின் ஓ பிரையன் (38 வயது) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இதுவரை 3 டெஸ்ட், 153 ஒருநாள் மற்றும் 110 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 9,048 ரன் குவித்துள்ளார். 2011ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில்,  இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடிய கெவின் 50 பந்தில் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

* இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து, இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.

Related Stories: