விராலிமலை, ஆலங்குடி பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க பதுக்கிய 1000 மதுபாட்டில்கள் பறிமுதல்-4 பேர் கைது

விராலிமலை : புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அனுமதியின்றி அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 559 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் சுதந்திரதினமான நேற்று டாஸ்மாக் விடுமுறையை பயன்படுத்தி முதல் நாளே (ஞாயிற்றுக்கிழமை) டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களை சிலர் வாங்கி பதுக்கி வைத்துள்ளனர்.

அவற்றை கள்ளச்சந்தையில் அதிகவிலைக்கு மதுபாபாட்டில்கள் விறப்பனை செய்வதாக புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு விடிய, விடிய சோதனை நடத்தினர். இதில் அன்னவாசல் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடை மற்றும் சுற்றுப்பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட கல்லாங்குடி மணிகண்டன்(20), மாரப்பட்டி இளங்கோவன் (42), ராமசந்திரன் (32), மாறன் (60), ஆகிய 4 பேரை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இந்து 559 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆலங்குடி:ஆலங்குடியில் நேற்று சுதந்திரதினத்தன்று மதுபான கடைகள் விடுமுறை என்பதால் சிலர் மது விற்பதற்காக மதுபானங்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் ஆலங்குடி அண்ணா நகரில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் அதிவேகமாக அங்கிருந்து சென்றது. இதையடுத்து, போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து தங்களது காரில் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம ஆசாமிகள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அந்த காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் 429 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவற்றை ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories: