ஆஷ் துரையை பழி தீர்ப்பதற்காக வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுட பயிற்சி அளித்த புதுச்சேரி

பிரிட்டிஷ் காலகட்டத்தில் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றதும், இந்த சம்பவம் நடந்த ரயில் நிலையமான மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் சூட்டப்பட்டதும் நமக்கு தெரியும். இந்த சம்பவத்தில் புதுச்சேரி சம்பந்தப்பட்டிருப்பதும், புதுச்சேரியில் உள்ள ஒரு வீதிக்கு வாஞ்சிநாதன் வீதி என பெயர் வைக்கப்பட்டிருப்பதும் ஒரு ருசிகர தகவலாக விளங்குகிறது. இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்தபோது, புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி புரிந்தார்கள். அப்போது உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என மக்களுக்கு தனது கவிதை வரிகளால் தெம்பூட்டி, விடுதலை தீயை பற்ற வைத்த பாரதியாரை, பிரிட்டிஷ் அரசு பழிவாங்க துடித்தது. அப்போது அவருக்கு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி நடந்த புதுச்சேரிதான் அடைக்கலம் தந்தது.

பாரிஸ்டர் பட்டப்படிப்புக்காக லண்டன் சென்ற வ.வே.சு அய்யர், கர்சான் வைலி என்ற பிரிட்டிஷ் அதிகாரியை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தார். அப்போது அவர் வீர விக்கிரம சிங் என்ற பெயரில் சீக்கியர் போலவும், தொழுகை செய்யும் அரேபியர் போலவும் மாறுவேடங்களில் திரிந்துள்ளார். பின்னர் அவர் பிரேசில் நாட்டிற்கு செல்வது போல போக்கு காட்டிவிட்டு, துருக்கி வழியாக இலங்கைக்கு சென்றுவிட்டார். பின்னர் 1910ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரிக்கு வந்த வ.வே.சு அய்யருக்கு, பாரதியை போலவே அடைக்கலம் கொடுத்தது பிரெஞ்சு தேசம். அப்போது திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை தீர்த்துக்கட்ட வேண்டும் என தமிழகத்தில் சிலர் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தென்னாட்டு புரட்சிவாதி என அழைக்கப்பட்ட நீலகண்ட பிரம்மச்சாரியை பார்ப்பதற்காக நெல்லையை சேர்ந்த வாஞ்சிநாதன் என்ற வாலிபர் புதுச்சேரி வந்துள்ளார். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரி ஊரில் இல்லாததால், அவரை பார்த்துவிட்டுத்தான் செல்வது என வாஞ்சிநாதன் அங்கேயே தங்கியுள்ளார்.

இந்த சமயத்தில் வாஞ்சிநாதனுக்கு வ.வே.சு. அய்யரின் தொடர்பு கிடைத்துள்ளது. அப்போதுதான் ஆஷ் துரையை தீர்த்துக்கட்டும் திட்டம் புதுச்சேரியில் உதயமாகி உள்ளது. வ.வே.சு. அய்யரின் நண்பர்களான புதுச்சேரியை சேர்ந்த நாகசாமி, கண்ணுப்பிள்ளை (எ) முத்துக்குமாரசாமி பிள்ளை ஆகியோர் வாஞ்சிநாதனுக்கு புதுச்சேரியில் உள்ள கருவடிக்குப்பம் என்ற பகுதியில் துப்பாக்கி சுட பயிற்சி அளித்ததாகவும், இதற்காக பிரெஞ்சு துப்பாக்கியை வாஞ்சிநாதனுக்கு கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் தனது சொந்த ஊருக்கு சென்ற வாஞ்சிநாதன், மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை தொடர்ந்து ஆஷ் துரையின் உடலில் பாய்ந்திருந்த புல்லட்டை எடுத்து ஆய்வு செய்தபோது, அது பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட லா எதியென் மார்க்கு பிரவுனிங் என்ற கைத்துப்பாக்கியின் தோட்டா என தெரியவந்துள்ளது.மேலும் வாஞ்சிநாதன் புழங்கிய தெரு ஒன்றிற்கு (தற்போது எல்லைப்பிள்ளைசாவடி ராஜிவ்காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் நல மருத்துவமனை அருகே உள்ள பகுதி) வாஞ்சிநாதன் வீதி எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Related Stories: