தொடரும் வேட்டை!: கும்பகோணம் அருகே 1,000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகள் பறிமுதல்..சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மாசிலாமணி என்ற ஸ்தபதிக்கு சொந்தமான இடத்தில் இருந்து சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர். சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களாகவே விலைமதிக்க முடியாத பல்வேறு தொன்மையான சிலைகளை மீட்டெடுத்து வருகின்றனர். பழைய வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு, காணாமல் போன பல சிலைகள் மீட்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது 8 பழங்கால சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போக சக்தியம்மன், 9 அடி உயர சிவகாமி அம்மன், விஷ்ணு, இரு புத்தர் சிலைகள், ஆண்டாள், நடராஜர், ரமண மகரிஷி ஆகிய சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் திருடப்பட்ட கோவில்கள், சிலையை திருடியவர்கள் குறித்து சிலைகளை வைத்திருந்த மாசிலாமணியிடம் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: