டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம்

நன்றி குங்குமம் தோழி

96,000 டிராக்டர்கள்.. ஒன்றரை கோடி விவசாயிகள்.. தலைநகர் டெல்லி உழவர்களால் அதிர்கிறது. உலகிலேயே மிகப் பெரிய பேரணி என ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிடுகின்றன. மாநிலங்களின் பட்டியலில் உள்ள விவசாயத்தின் மீது ஆளும் மத்திய அரசு அதிரடியாக மூன்று சட்டங்களை இயற்ற, ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் சட்டங்களை ஆளும் மத்திய அரசு கொண்டுவந்து இருக்கிறது என விவசாய அமைப்புகள் குற்றஞ்சாட்டின.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்த்துவந்த நிலையில், இந்தச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென, நாடு முழுதும் இருந்து ஒன்றுகூடிய பல்வேறு விவசாய அமைப்புகள், திரளாக ஒன்றிணைந்து தலைநகர் டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலத்துப் பெண்கள் உட்பட, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்கள். இதன் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

விவசாயிகளை உள்ளே நுழையவிடாமல் தடுக்க, உத்தரப்பிரதேசம், ஹரியானா எல்லைகளில் கண்ணீர் புகைக்குண்டுகள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களுடன், ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். அந்தத் தடைகளை தகர்த்து  நவம்பர் 27ல் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் கால் பதித்தனர். காவல்துறையினர், விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதோடு, குளிர்ந்த நீரைப் பீச்சியடித்தனர். எதிர்ப்புக்களைத் தெரிவித்த போராட்டக் குழுவினர் டெல்லி எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீட்டுக்குத் திரும்ப மாட்டோம் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம் வேகமெடுத்திருக்கும் நிலையில்,  பஞ்சாப் - டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையோடு  மேலும் சில நெடுஞ்சாலைகளும் உடனடியாக மூடப்பட்டன.  ரயில்கள் சிலவும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. மத்திய அரசுடனான பேச்சு வார்த்தை தோல்விக்குப்பின் போராட்டக்குழு தலைமை ஹன்னன் முல்லாஹ் பேசும்போது, மத்திய அரசிடம் நாங்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறோம். அமைதியாக வாபஸ் பெறுங்கள், இல்லையேல் எங்களை சுட்டுக் கொல்லுங்கள் எனச் சொல்லியுள்ளார்.

போர்முனையில் ஏர்முனை

விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள்

*அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம் - 2020.

*விவசாய விளை பொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்- 2020.

*விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் - 2020.

போராட்டக் களத்தில் சில காட்சிகள்

*கண்ணீர் புகைக்குண்டால் தாக்கப்பட்ட 70 வயது பஞ்சாப் முதியவர், சிகிச்சைக்கு அழைத்தவரிடம், ‘முக்கியமான நிகழ்வு கண்முன் நடக்கிறது, சிகிச்சையை பிறகு பார்க்கலாம்’ என்றார்.

*போராட்டத்தில் இருக்கும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற 82 வயது ஷகீன் பாக் தாதி பில்கீஸ் பானு.

*ரொட்டியும் சுடுவோம்.. டிராக்டரும் ஓட்டுவோம்

*பாடப்புத்தகங்களோடு சிறுமிகளும் களத்தில்…

*கடும் குளிரில் போராடும் உழவர்களின் மன உறுதி

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: