ஆர்ட் என்பது யுனிவர்செல் லாங்குவேஜ்..!

நன்றி குங்குமம் தோழி

ஸ்டிப்லிங் (stippling portrait) என்ற ஓவிய வகைப்பாட்டில் “WOMEN HAVE SUPERPOWER” என்ற தலைப்பில் 182 சதுர அடி அளவில் மிகப்பெரிய அளவிலான ஓவியம் வரைந்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் சென்னையை சேர்ந்த சுதர்சன். ஆர்க்கிடெக்சர் மூன்றாம் ஆண்டு படித்துவரும் இவர், இந்த ஓவியம் வரைவதற்காக எடுத்துக் கொண்டது  88 மணி நேரம்.

‘‘நான் சாதாரணமான பையன் தான். சென்னைதான் சொந்த ஊர். தாம்பரம் பக்கம் சேலையூர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எனக்கு இந்த சாதனை செய்வதற்காக உறவினர்கள் உதவியும் பெரிதாக கிடைக்கவில்லை. பள்ளி படிக்கும் போதிலிருந்தே ஓவிய வகுப்புக்கும் போய் வந்தேன். நான் பிறக்கும் போதே இரண்டு விரல் சேர்ந்து இருந்தது. அதனால் அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தாங்க. சிகிச்சைக்கு பிறகு, எனக்கு விரல்களில் கொஞ்சம் நடுக்கம் மற்றும் பொருட்களை பிடிப்பதில் சிரமம் இருந்தது.

அதனால் ஓவியப் பயிற்சி எடுத்தால் நடுக்கம் குறைந்து, வலு ஏற்படும்ன்னு சொன்னாங்க. அதனால் ஓவியப் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். இயல்பாவே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். ஆனால் அதிலும் சில தடங்கல் ஏற்பட்டது. பயிற்சிக்கு கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், இடையில் நிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் நான் வரையறதை நிறுத்தவில்லை.

பள்ளிப்படிப்பை முடிச்சுட்டு மேற்கொண்டு என்ன படிக்கலாம்னு இருந்த நேரத்தில் என்னுடைய ஓவியத்திறமையை மேம்படுத்தவும், அதே சமயத்தில் நல்ல ஒரு வேலைக்கு போக வேண்டும் என்கிற வருங்கால திட்டத்தோடும் ஆர்க்கிடெக்சர் சேர்ந்தேன். அங்கதான் ஸ்டிப்லிங் ஆர்ட் அறிமுகமானது. வெறும் புள்ளிகள் மட்டுமே வச்சு வரையணும். ஒரு மெல்லிய கோடு கூட இருக்க கூடாது’’ என்றவர் அதையே தன்னுடைய சாதனையாக மாற்றியுள்ளார்.

‘‘ஸ்டிப்லிங் ஓவியத்துக்கு உலகத்திலேயே ஆர்டிஸ்ட் கம்மி. அப்படி இருக்கும் போது இந்த ஆர்ட்டில் நம்ம ஏதாவது சாதிக்கணும்னு யோசிச்சேன். அதை மற்றவர்களிடம் சொல்லும் போது சின்ன ைபயன் ஏதோ சொல்லிட்டு இருக்கானு அலட்சியமா பார்த்தாங்க. இதை ஒரு வருஷத்துக்கு முன்பே முடித்திருக்க வேண்டியது.

ஆனால் அந்த நேரத்தில் ஸ்பான்சர் யாரும் கிடைக்கல. என்னாலும் அதற்கு செலவு செய்யவும் முடியல. அதனால் நானே எனக்கு வர வெளி வேலைகளை வச்சு கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்தேன். இந்த மாதிரி சாதனை பண்ணும் போது சாட்சிக்கு அரசு அலுவலர்கள், ஊடகத்தினர் உதவி தேவை என்பது போட்டியின் விதி. ஆனால், அதெல்லாம் அமையும் போது என்னிடம் போதிய நிதி இல்லை. எல்லாம் கூடி வந்து கடைசியாக கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி முழுமையாக செய்து முடித்தேன்” என்று கூறும் சுதர்சன், இந்த தலைப்பை தேர்வு செய்வதற்கான காரணத்தை கூறினார்.

‘‘வரைய வேண்டும் என்றால் எது வேண்டுமானாலும் வரையலாம். ஆர்ட் என்பது யுனிவர்செல் லாங்குவேஜ்னு சொல்லுவாங்க. அதனால் சமகாலத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளை மையமாக கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியத்தினை, ஒரு சகோதரனாக, ஒரு கலைஞனாக பாதிக்கப்பட்ட எல்லா பெண்களுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்ன்னு நினைச்சேன். பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் தவறு செய்யாதவர்கள். அவர்கள் எல்லோரும் தைரியமான பெண்கள். எனவே தான் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் தாங்கிக்கொள்ளும் பீனிக்ஸ் பறவையோடு பெண்களை ஒப்பிட்டு வரைந்திருக்கிறேன்.

இவ்வாறு ஒரு பெரிய அளவில் வரைய போகிறேன் என்று சொன்னதும் எனக்கான முதல் ஆதரவு நண்பர்களிடம் இருந்து தான் வந்தது. என் தேவைகளுக்காக தான் அம்மா இப்ப வேலைக்கு போறாங்க. வீட்டுல அம்மா, அப்பா, தங்கச்சியோடு சேர்த்து இந்த நேரத்தில் எனது ஓவிய ஆசிரியர் ராஜேந்திரன் சார் மற்றும் என்னை வெளி உலகிற்கு காட்டிய அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

நல்லா படிப்பதால் ஸ்காலர்ஷிப்பில் இது வரை வந்துட்டேன். ஸ்டிப்லிங் மட்டுமல்லாது, சார்கோல் ஆர்ட்டும் எனக்கு கைவந்த கலை. இந்த சாதனையை தொடர்ந்து மற்றொரு உலக சாதனைக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறேன். அதற்கான ஸ்பான்சர்ஷிப் தேடிக் கொண்டு இருக்கிறேன்’’ என்கிறார் சுதர்சன்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: