நாஸ்டால்ஜியா ஓவியங்களால் மனதைக் கவரும் கலைஞர்!

நாம் பருகும் தேநீர் கோப்பைகளில் தொடங்கி உடுத்தும் உடை, லேப்டாப், நோட்டு புத்தகங்கள், ஹாண்ட் பேக்குகள் என அனைத்திலுமே தனித்துவத்தை விரும்புகிறோம். இதனால் படைப்பாற்றல் மிகுந்த கலைஞர்களின் தேவையும் என்றும் இல்லாதது போல், இன்று அதிகரித்துள்ளது. ‘‘படைப்பாற்றலுக்கு அடிப்படை ஓவியம்தான் என்றாலும், அதில் பல வகை உள்ளன’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் தேஜஸ்வினி. “அனிமேஷன் திரைப்படங்களில் தொடங்கி, கிராஃபிக் நாவல்கள், விடியோ கேம்கள், நாட்காட்டிகள் - நாட்குறிப்புகள் என உலகளாவிய சந்தையாக இவை உருமாறியுள்ளன” என்கிறார்.

இருபத்திரண்டு வயதாகும் தேஜஸ்வினி பிகாம் படித்திருந்தாலும், கையில் பென்சில் பிடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே ஓவியங்கள் வரையத் தொடங்கிவிட்டார். தற்போது freelance illustratorஆக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கலையில், கதைசொல்லி வடிவத்தில் குழந்தைகளின் புத்தகங்களில் வரைவதில் திறமையானவர்.  இதுவரை குழந்தைகளுக்கான இரண்டு புத்தகங்களில் கதைசொல்லி வடிவ ஓவியங்களை உருவாக்கியிருக்கிறார்.

‘‘நூறு நாட்களுக்கு நூறு ஓவியம் என்ற போட்டியில் கலந்துகொண்டேன். அதில், தினமும் ஒரு தலைப்பு கொடுத்து அந்த கருத்தையொட்டிய ஓவியங்களை வரைய வேண்டும். அந்த போட்டியில் எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.

பரிசையும் தாண்டி, அந்த நூறு நாள் பயிற்சி, என் கலையில் எனக்கே உரிய தனித்துவத்தைக் கண்டு பிடிக்க உதவியது. ஒரு கலைஞனின் ஒரே இலக்கு, பயிற்சியாகத்தான் இருக்க வேண்டும். ஓவியம், இசை என எந்த கலையாக இருந்தாலும் தினமும் அதைச்செய்து பழக வேண்டும்” எனத் தன் டிப்ஸை பகிர்கிறார்.

தேஜஸ்வினியின் ஓவியங்கள் மனிதர்களை அவர்களின் நினைவுகளோடு இணைக்கும் ’நாஸ்டால்ஜியா’வாக இருக்கின்றன. ‘‘காலச் சக்கரத்தின் பிடியில் சுழலும் மக்களை, அவர்களின் நினைவுகளோடு இணைக்கும் ஒரு சிறிய முயற்சிதான் இந்த நாஸ்டால்ஜியா ஓவியங்கள்.

குழந்தைப் பருவத்தில் நாம் செய்த சின்ன சின்ன குறும்புகள், அந்த நாட்களில் எதிர்காலம் - பொறுப்புகள் என எந்த கவலையும் இல்லாமல் நண்பர்களுடன் கூடி விளையாடித் திரிந்த தருணங்களை, ஒரு நிமிடம் நின்று நிதானமாக நினைத்துப்பார்க்க வைப்பதுதான் இந்த ஓவியங்களின் நோக்கம். இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதுமே ஹார்டின்கள் குவிந்து மக்களை மகிழ்வித்தன. எனவே இதையே என் ஸ்டைலாக மாற்றிக்கொண்டேன்” என்கிறார்.

ஒரு வருடமாக ஃப்ரீலான்ஸ் கலைஞராக பணியாற்றி வரும் இவர், தொடர்ந்து குழந்தைகளுக்கான புத்தகங்களில் ஓவியங்கள் உருவாக்கி வருகிறார்.

வருங்காலங்களில், தமிழில் புகழ்பெற்ற ஆத்திச்சூடி, பாரதியார் பாடல்கள் போன்ற பல செய்யுட்களை, பாடல்களை, காவியங்களை கதைசொல்லி வடிவில் ஓவியங்களாக உருவாக்கி குழந்தைகளுக்கு எளிதில் புரியும்படி தமிழ் எழுத்துக்களுக்கு புது வடிவம் கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories: